அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 279 781, 97861 51763 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கொழுந்தீஸ்வரர் (அக்ர பரமேஸ்வரர்)
அம்மன் தேனார் மொழியம்மை (தேனாம்பிகை என்ற மதுர பாஷிணி)
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் முள்ளியாறு, சிவகங்கை, பிரம, சிவ, மண்டை, அமுத, இந்திர, விசுவகன்ம, அரம்பா என 9 வகை தீர்த்தங்கள்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இந்திரபுரம், மேலக்கோட்டூர் கோயில், திருக்கோட்டூர்
ஊர் கோட்டூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அதற்கு பிரம்மா, “இந்திரனே! ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று, அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும். அவரது முதுகெலும்பு மிகவும் பலமானதாக விளங்குவதற்கு காரணம் உள்ளது. முன்னொரு காலத்தில் திருப்பாற்கடல் கடைவதற்கு முன்பாக, தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களை இந்த முனிவரிடம் ஒப்படைத்து, பத்திரமாக வைத்திருக்க வேண்டினார்கள். இவர் அனைத்து ஆயுதங்களையும் தன் வாயில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தின் சக்தியால் அனைத்து ஆயுதங்களும் உருகி அவரது முதுகெலும்பில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது முதுகெலும்பு மிகவும் பலமுள்ளதாகிவிட்டதுஎன்றார்.

இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று, அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி அரக்கனை கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை போக்க தேவகுருவை நாடினான். அவரும்,”இந்திரனே! நீ பூவுலகில் சிவதல யாத்திரை செய்து சிவபூஜை செய். அப்போது, தேவர்கள் அமுதம் பெறும்போது சிந்திய அமுதத்துளியால் உண்டான வன்னிமரத்தின் அடியில் சிவலிங்கம் இருக்கும். இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் உனது தோஷம் நீங்கும்என்றார். அதன்படி இந்திரன் இங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம்என்றும், ஐராவத யானை பூமியில் கோடு கிழித்ததால் கோட்டூர்என்றும் அழைக்கப்பட்டது.

தேவலோக மங்கை இரம்பை இந்திர லோகத்தில் செய்த தவறுக்காக பூமிக்கு செல்லும்படி சபிக்கப்பட்டாள். அவள் மீண்டும் இந்திர லோகம் செல்வதற்காக, இத்தலத்து ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். பிரதோஷ கால மூர்த்தி இங்கு தனி சன்னதியில் சிலை வடிவில் உள்ளது. மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை இன்றும் பார்க்கலாம்.

மேற்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம். இரண்டு பிரகாரம். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, தெட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அகோர வீரபத்திரர், நந்திகேஸ்வரர், வல்லபகணபதி, நடராஜர், பிரம்மா, மகிஷாசுரமர்த்தினி, பைரவர், நவகிரகம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.

தேவாரப்பதிகம்:

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய் கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைக ளன்னஞ் சேர்ந் தழகாய் குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே என்று எழுவார்கள் நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 111வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம் பிரமோத்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மகத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *