அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்

அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர், பொன்னிரை, திருவாரூர் மாவட்டம்.

+91- 94427 67565 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்வைத்த நாதர் (சொர்ணஸ்தாபனேஸ்வரர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் ஆத்திமரம்
தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி
ஆகமம் காரண, காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிற்றேமம், எழிலூர் நேமம், சிற்றாம்பூர், சிற்றாய்மூர்
ஊர் சித்தாய்மூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

தலத்தின் தேவாரப்பெயர் திருச்சிற்றேமம். இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சில நாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள் கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி, சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்குப் பூமாலை தொடுத்துக் கொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒரு பொன் காசை கோயில் வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் பொன்வைத்த நாதர்எனப்பட்டார். சில மாதங்களில் இவள் கர்ப்பமாக இருப்பது வெளிஉலகிற்குத் தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. “கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம் ஏது?, எப்படிக் கர்ப்பமடைந்தாள்என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனே தஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமே இல்லை. தன்னைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள். உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்குப் பிரசவம் பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர் திரும்பினான். ஊர் மக்கள் அவரிடம் உன் மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள். அதற்கு கணவன்,”நீ உண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவு தானே திறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜை தானாக நடக்க வேண்டும். நந்திக்கு பின்னால் இருக்கும் பலி பீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர வேண்டும்என நிபந்தனை விதித்தான். இதைக்கேட்ட அப்பெண் இறைவனை மனமுருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது.

பலிபீடம் நந்திக்கு முன்னால் அமைந்தது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர்ந்தது. அர்த்தஜாமப் பூஜையும் அர்ச்சகர் இல்லாமல் தானே நடந்தது. இறைவனின் திருவருளால் அனைத்தும் நடந்ததை அறிந்த மக்கள், அப்பெண்ணை வாழ்த்தினர். நந்தி கோயிலுக்கு வெளியே இருப்பதையும் நந்திக்கு முன் பலிபீடம் இருப்பதையும் இன்றும் காணலாம். இத்தல இறைவனைஅகத்தியர், இந்திரன், நாகராஜன், பிரம்மா ஆகியோர் பூஜை செய்துள்ளனர். இத்தலவிநாயகர் ஆத்திமரவிநாயகர்என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.

முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி என்பவர், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. எனவே இவர் தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதைக் காணலாம். இந்த தேன் கூட்டிற்கு நாள் தோறும் பூஜை நடக்கிறது.

மிகவும் பழைய புராதனமான கோயில். சற்று சிதிலமடைந்துள்ளது. இராஜகோபுரம் அழகானது. கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் நுழையும் முன்பு வெளியே தலவிருட்சம் ஆத்தி உள்ளது. இராஜகோபுரம் தாண்டி உட்சென்றா பிரகாரத்தில் கன்னி வினாயகர், முருகன், மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. பிரம்மரிஷி, ஐயனார், பைரவர், சனி, சூரியன் ஆகிய சன்னிதிகள் தரிசிக்கத்தக்கவை. கோஷ்ட மூர்த்தங்களை வணங்கி உள்ளே மண்டபத்துள் சென்றா மூலவர் தரிசனம். மூலவர் மேனியில் வெட்டுக்காயம் உள்ளது. தலப்பதிகம் அம்பாள் சன்னிதியின் முன்பு பதிக்கப்பட்டுள்ளது. வேலவர், ஸோமாஸ்கந்தர், பிரதோசநாயகர் , சந்திரசேகரர் மற்றும் தலத்துடன் தொடர்புடைய செட்டியார் ஆகியோர் உற்சவத் திருமேனிகள் உள்ளன. கோயிலின் வெளியே வலப்பக்கம் குளம் உள்ளது.

தேவாரப்பதிகம்:

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக் கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான் தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ் சிற்றேமத்தான் மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 106வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம் முக்கிய திருவிழா. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

திருத்துறைப்பூண்டிக்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ஆலத்தம்பாடி நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் சரளைக்கல் சாலையில் 6 கீ மீ வந்து அங்கு சித்தாய்மூர் எனக்காட்டும் கைகாட்டியில் இடப்பக்கமாகப் பிரியும் சாலையில் 3 கீ மீ வந்தால் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன. மினி பஸ்கள் வருவதாகச் செய்தி. இரயிலில் வருவோர் ஆலத்தம்பாடி இரயில் நிலயத்தில் இறங்கிக்கொண்டு மேற்கூறிய வழியே வந்தால் இத்தலத்தை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *