அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, (திருப்பாதாளீச்சுரம், பாம்பணி), திருவாரூர் மாவட்டம்.

+91- 93606 85073 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகநாதர்
அம்மன் அமிர்தநாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், நாகதீர்த்தம், பசுதீர்த்தம், தேனு தீர்த்தம், உருத்ரதீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பாதாளேச்சரம், பாம்பணி
ஊர் பாமணி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் பலம் பொருந்திய தன் தலையால் மேருமலையை அழுத்தி பிடித்து கொண்டு, உடலால் மலையை சுற்றிக்கொண்டது. எனவே வாயு பகவான் மலையை அசைக்க முடியாமல் தோற்றது. இந்த கோபத்தால் வாயு காற்றை அடக்க சகல ஜீவராசிகளும் காற்றின்றி பரிதவித்தது. தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க போட்டி மீண்டும் நடந்தது. தேவர்கள் ஆதிசேஷனின் வலிமையை சற்று குறைக்க, 3 தலைகளை மட்டும் தளர்த்தியது. வாயு மூன்று சிகரங்களை பெயர்த்தது. தான் தோற்றதால், மனவேதனை அடைந்த ஆதிசேஷன், மனநிம்மதிக்காக சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டது. பாம்பு உருவாக்கிய இலிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.

ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம்என்ற பெயரும் உண்டு. மனிதமுகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்குத் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், இராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன்.

வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், இராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. மண்ணால் அமைக்கப்பட்ட இலிங்கங்களுக்கு, பிற கோயில்களில் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனி சிறப்பாகும். இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம ராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தெட்சிணாமூர்த்தியாகஅருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும்.
ஒருமுறை தெட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு, தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்மதெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

முகப்பு வாயிலைத் தாண்டி உள்ளே புகுந்தால் வலப்பக்கம் அம்பாள் சந்நிதி. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், மூல விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வசார், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான் நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

நாகமும் வான்மதியும் நல்மல்கு செஞ்சடையான் சாமம் போகநல் வில்வரையாற் புரமூன்று எரித்துகந்தான் தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப் பாகமும் வைத்துகந்தா னுறை கோயில் பாதாளே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 104வது தலம்.

திருவிழா:

வைகாசி மாதம் பிரமோற்சவம். தைப்பூசம் தீர்த்தவாரி. கந்தசஷ்டி. திருவாதிரை, மகாசிவராத்திரி.

பிரார்த்தனை:

இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், இராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

One Response to அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி

  1. manikandandesikar says:

    thankyou!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *