அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்-631 501.
+91 44 2722 2609
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – காஞ்சிபுரம்
மாநிலம்: – தமிழ்நாடு
அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். தேவர்கள் தங்களைக் காக்கும்படி பூவுலகுக்கு வந்து அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை அழித்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சியிலேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த திருச்(ஸ்ரீ)சக்ரம் நிறுவனம் செய்யப்பட்டது. இவள் “ஆதிகாமாட்சி” என்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் “காளி கோட்டம்‘ என்றும் பெயருண்டு.
பிரகாரத்தில் மடாலீசுவரர் லிங்கம், சப்தகன்னியர், நாகர், மகிஷாசுரமர்த்தினி உள்ளனர். அன்னபூரணியின் புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. ஒரு காலத்தில், கருவறையில் இருந்த அம்பிகை, வீரியலட்சுமி என்ற பெயரில் தனி சன்னதியில் இருக்கிறாள்.
ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை “அர்த்தநாரீசுவர லிங்கம்‘ என்றும் அழைக்கின்றனர்.
பவுர்ணமி பூசை:
ஆதிகாமாட்சி பத்மாசனத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அன்னக் கிண்ணம் உள்ளது. காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது. சன்னதி முகப்பில் திருச்சக்கர இயந்திரம் உள்ளது. காலையில் திருச்சக்கரத்திற்குப் பூசை செய்தபின்பே, அம்பிகைக்கு பூசை செய்வர். பவுர்ணமி இரவில் அம்பிகைக்கு விசேட பூசை நடக்கும். பக்தர்கள் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பால்முழுக்காட்டு செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள். அம்பாள் சன்னதி முகப்பில் துவாரபாலகியர் மட்டும்தான் இருப்பர். இக்கோயிலில் முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவார பாலகியரும் இருக்கின்றனர்.
திருமண வழிபாடு :
கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் திருமுழுக்காட்டு செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்புப் படையல் செய்து வணங்குகின்றனர்.
மூன்றும் தரும் அம்பிகையர் :
உற்சவ அம்பிகையுடன் சரசுவதி, மகாலட்சுமி இருக்கின்றனர். இவர்களை வணங்க கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம். அம்பாள் சன்னதி கோட்டத்தில் (சுற்றுச்சுவர்) நடனமாடும் கணபதி, மகேசுவரி, வைணவி, பிராமி, துர்க்கை உள்ளனர்.
நவராத்திரி விழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்களும், அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவாள். 11ம் நாளில் அம்பிகைக்கு சந்தனக்காப்பிடப்படும். கடைசி நாளன்று அம்பிகை மலர்ப் பல்லக்கில் புறப்பாடாவாள்.
தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தம்பதியர் ஒற்றுமையாக வாழவும் வேண்டிக் கொள்கின்றனர்
பக்தர்கள் ராகு காலத்தில் பால் முழுக்காட்டு செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
Leave a Reply