அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில், பூவனூர்

அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில், பூவனூர், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91-94423 99273 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சதுரங்க வல்லபநாதர்
உற்சவர் புஷ்பவனேஸ்வரர்
அம்மன் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி
தல விருட்சம் பலாமரம்
தீர்த்தம் பாமணி, ஷீர புஷ்கரணி, கிருஷ்ண குஷ்டஹர தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புஷ்பவனம், திருப்பூவனூர்
ஊர் பூவனூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர்

வசுதேவன் என்ற மன்னன் மனைவி காந்திமதியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று இருவரும் மனமுருகி வணங்கினர். இவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவன், பார்வதியை அவர்களுக்கு குழந்தையாக பிறக்கும்படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருள்புரிந்தார். ஒரு முறை மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும் போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரையில் சங்கு வடிவில் தோன்றினாள். மன்னன் அந்த சங்கை கையில் எடுத்தவுடன் அது குழந்தையாக மாறியது. இதனால் மன்னனும் இராணியும் மகிழந்து குழந்தைக்கு இராஜராஜேஸ்வரிஎன்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இறைவன் அருளின்படி சப்தமாதர்களுள் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக இருந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்று தேர்ந்தது. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள். இதையறிந்த மன்னன் தன் மகளை சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே மணமுடிக்கப்படும் என அறிவித்தான். ஆனால் இவளை சதுரங்கத்தில் யாரும் ஜெயிக்கவில்லை. அக்காலத்தில் முனிவர் ஒருவர் அறிவுரையின்படி தன் மகள், வளர்ப்புத்தாய் சாமுண்டி, இராணி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது பூவனூர் என்ற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு வேண்ட இறைவனும் ராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வென்று, தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர்எனப்படுகிறார். அம்பிகை ராஜேஸ்வரியும், வளர்ப்புத்தாய் சாமுண்டியும் இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் இருந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொள்ள இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.

மைசூரிலுள்ள சாமுண்டி மலையை அடுத்து இத்தலத்தில் தான் சாமுண்டீஸ்வரி தனி சன்னதியில் வடக்கு நோக்கி பிரமாண்டமாக வீற்றிருக்கிறாள். விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், சுகமுனிவர், அகத்தியர் ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.

தேவாரப்பதிகம்:

ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண் ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 103வது தலம்.

திருவிழா:

சாமுண்டீஸ்வரிக்கு சித்திரை மாத அமாவாசையின் மறுநாள் முதல் 10 நாள் திருவிழா. வைகாசி விசாகம், ஆவணிமூலம், ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

ஆஸ்த்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை. பணம் கொடுக்கல் வாங்குதலில் பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்கு சாமுண்டீஸ்வரியை வழிபாடு செய்வது சிறந்த பலனைத்தரும்.

நேர்த்திக்கடன்:

எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து கையில் வேர்கட்டிக்கொண்டு கோயிலின் எதிரிலுள்ள தீர்த்தத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *