அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 292 300, +91- 94431 13025 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வர்த்தமானீஸ்வரர்
உற்சவர் கல்யாண சுந்தரர்
அம்மன் மனோன்மணி
தல விருட்சம் பின்னை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சரண்யபுரம்
ஊர் திருப்புகலூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்துவிட்டனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. எனவே அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தருளினார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர். நாயன்மார்களில் ஒருவரான முருகனார் இத்தலத்தில் பிறந்தவர். சிவபக்தரான அவர் மலர்களை பறித்து, மாலையாக தொடுத்து தினமும் வர்த்தமானீஸ்வரரை வழிபட்டு வந்தார். இங்கு வணங்க வரும் பக்தர்களுக்காக மடம் ஒன்றையும் கட்டினார். திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

இளங்கோயில்: வர்த்தமானீஸ்வரருக்கு எதிரில் முருக நாயனார், கையில் மலர்மாலை வைத்தபடி காட்சி தருகிறார். அம்பிகை மனோன்மணி, முன்மண்டபத்தில் காட்சி தருகிறாள். பூஜையின்போது சுவாமிக்கு வாசனை மலர்மாலை அணிவித்து, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் வர்த்தமானீஸ்வரருக்கு வலதுபுறத்தில் அக்னீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். வர்த்தமானீஸ்வரர் திருஞானசம்பந்தராலும், அக்னீஸ்வரர் மூவராலும் பாடல் பெற்றவர்கள் ஆவர். வர்த்தமானீஸ்வரர், அக்னீஸ்வரர் இருவரது சன்னதியையும் சேர்த்தே சுற்றி வந்து வணங்க முடியும். வர்த்தமானீஸ்வரர் சன்னதியை தனியே வலம் வர முடியாது. இவருக்கென தனி கொடிமரம், கோஷ்ட தெய்வங்களும் இல்லை. இக்கோயிலை இளங்கோயில்என்று அழைக்கிறார்கள். நுழைவுவாயிலை அடுத்து அக்னி பகவான் மூலவராக இருப்பது விசேஷ அம்சம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம் இது. சுந்தரருக்காக சிவன், செங்கற்களை தங்கமாக மாற்றி இத்தலத்தில் அருள்புரிந்தார்.

வர்த்தமானீஸ்வரர் நிகழ்காலத்தில் அனைத்தும் நன்மையாக நடக்க அருளும் சிவனாக அருளுகிறார். வர்த்தமானம் என்றால் நிகழ்காலம் என்று பொருளாகும். இவருக்கு வலப்புறத்திலுள்ள பூதேஸ்வரர், இறந்த காலத்தில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தருபவராக இருக்கிறார். முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் இவரை வேண்டி இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்கிறார்கள். தனிச்சன்னதியில் மேற்கு நோக்கியிருக்கும் பவுசேஸ்வரர் எதிர்காலம் சிறக்க அருளுபவராக காட்சி தருகிறார். செய்த தவறுக்கு வருந்துபவர்களும், நிகழ்காலம், எதிர்காலம் நன்றாக இருக்கவும் மூன்று சிவனையும் தரிசித்துச் செல்கிறார்கள்.

இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து இலிங்கத்தைப் பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது. பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க, தனிச்சன்னதியில் இருக்கிறார்.

சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட பெரிய கோயில். பாணாசுரன் தோண்டிய அகழியே நாற்புரமும் தீர்த்தமாகவுள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். 5 நிலைகளையுடையது. உள்கோபுரம் 3 நிலைகள். உள்ளே நுழைந்ததும் பிரதான வினாயகர். உள்ளே வலப்பால் அம்பாள் சன்னிதி. வெளிப்பிரகாரத்தில் சிந்தாமணீஸ்வரர், நர்த்தன வினாயகர், பாரத்வாஜர் வழிபட்ட இலிங்கம், அப்பர் ஐக்கிய சிற்பம் முதலிய சன்னிதிகள் உள்ளன. உல்பிரகாரத்தில் அக்னி, அறுபத்துமூவர், பஞ்ச லிங்கங்கள், அப்பர் சன்னிதி, வாதாபி கணபதி, சுப்பிரமணியர், மகரிஷிகள் வழிபட்ட இலிங்கங்கள், மஹாலட்சுமி, சனீஸ்வரன், நளன், நவக்கிரகங்கள், சரஸ்வதி, அன்னபூரணி, காலஸம்காரர் முதலிய சன்னிதிகள் உள்ளன.

மூலவரை வாணாசுரன் பெயர்த்தெடுக்க முயன்றதால் கோணப்பிரான் என்னும் பெயருக்கேற்ப சற்று வடக்காக சாய்ந்துள்ளது. குவளை சார்த்தப்பட்டுள்ளது. மூலவருக்கு அருகில் சந்திரசேகரர் சன்னிதி உள்ளது. இவரே இங்கு பிரதானமானவர். கோஷ்டமூர்த்தங்களாக தக்ஷிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர், பிரம்மா, துர்கை, பிட்சாடனர், ஆலிங்கன கல்யாணசுந்தரர் முதலியவர்கள் உள்ளனர். நடராஜ சபை உள்ளது. உற்சவ மூர்த்தங்களுள் அக்னி, மூகாசுர சம்கார மூர்த்தி, சோமாஸ்கந்தர் முதலியவை மிகச்சிறப்பானவை.

திருப்புகலூருக்குள்ளேயே திருப்புகலூர் வர்தமானீச்சரம் உள்ளது. மூலவருக்கு வலப்பால் உள்ளது. இது தனிக்கோயில். சன்னிதிக்குள் நுழைந்தால் இடப்பால் முருகநாயனார் சன்னிதி. சம்பந்தர் பதிக கல்வெட்டு உள்ளது. வர்த்தமான இலிங்கம் மிக அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சன்னிதி. இது சம்பந்தர் பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். நவக்கிரகங்கள் வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு.

தேவாரப்பதிகம்:

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொடு ஆடல் அறாத விண்ண வண்ணத் தராய விரிபுகல் ஊரரொர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொடு ஆணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 76வது தலம்.

திருவிழா:

வைகாசியில் முருகநாயனார் குருபூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம். முருகநாயனார் குருபூஜை வைகாசி மாத மூல நட்சத்திரத்தன்று நடக்கிறது. அப்போது நாயனார், புஷ்பவிமானத்தில் புறப்பாடாகிறார்.

பிரார்த்தனை:

வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *