அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்

அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர் மாவட்டம்.

+91-4366-237 007 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)
அம்மன் பிரகந்நாயகி, பெரியநாயகி
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாலவனம், பனையூர்
ஊர் திருப்பனையூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், சுந்தரர்

சுந்தரர், திருவாரூர் பங்குனி உத்தரத் திருநாளுக்காக, பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று தம்மையே புகழ்ந்துஎன்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, “அரங்காட வல்லார் அழகியர்என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் சந்தித்த தீர்த்தம்என்றும் பெயருடன் திகழ்கிறது.

கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. இராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-

தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனைக் கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயாதியர்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய இரும்பிடர்த்தலையார்என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தனர். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் துணையிருந்த விநாயகர்என்னும் பெயர் பெற்றார்.

தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.

இத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், “மாற்றுரைத்த விநாயகர்என்றழைக்கப்படுகின்றார். பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி தாலவனேஸ்வரர். மேற்கு நோக்கியது. சதுர ஆவுடையார். இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார்.

மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை, நடராஜர் சந்நிதி உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது. இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது. பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இக்கோயில் கி.பி.11 –ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் இராசேந்திர சோழப் பனையூர்என்று குறிக்கப் பெறுகின்றது என சொல்லப்படுகிறது.

தேவாரப்பதிகம்:

“”அணியார் தொழவல்ல வரேத்த

மணியார் மிட றென்று டையானூர்

தணியார் மலர் கொண்டு இருபோதும்

பணிவார் பயிலும் பனையூர்

சம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.

திருவிழா:

சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.

பிரார்த்தனை:

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *