அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி, திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களநாதர்
அம்மன் மங்களாம்பிகை
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிறுகுடி
ஊர் திருச்சிறுகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனைத் தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வமரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் இலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார். இதனால் அம்பிகை மங்களாம்பிகைஎன்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை மங்கள தீர்த்தம்ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர்என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனைக் காப்பாற்றச் சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்துஎன சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார். இக்கோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.

பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால், “சூஷ்மபுரீஸ்வரம்என்று இவ்விடம் கூறப்படுகிறது. மேலும் சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதாகும். செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர். கி.பி.7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி, இக்கோயிலுக்கு அருகே உள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும், சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரத்தில் இக்கோயில் பற்றி அறிந்த முஸ்லிம் மக்களும் வருகின்றனர். இங்குள்ள அங்காரகனை வழிபட்டு செல்வதால், அவர்களது நோய், நொடி நீங்குவதோடு, தோஷங்களும் நீங்குகிறது என நம்புகின்றனர். இக் கோயிலின் திருப்பணிக்காக பெயர் குறிப்பிடாமல் முஸ்லிம்கள் பலர் நன்கொடைகளை வழங்கியுள்ளார்கள்.

இராஜ கோபுரம் 3 நிலைகள் கொண்டது. கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. பிரகாரத்தில் மங்கள வினாயகர். மண்டபத்தின் உள்ளே வலப்புறத்தில் சனைச்சரன் (சனீஸ்வரரின் சரியான பெயர்), பெரிய ஞானசம்பந்தர் திருமேனிகள் உள்ளன. இடுப்பில் அரைஞாண் கயிறு அணிந்து மாலையுடன் அழகாக காட்சியளிக்கிறார். வலப்பால் மங்களாம்பிகை அழகாக அபய முத்திரையுடன் உள்ளார். நேரே மூலவர் உள்ளார். சுயம்புத் திருமேனி. இறைவன் பெயர் சூக்ஷ்மபுரீஸ்வரர். நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானதென்பர். எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு அபிஷேகம் கிடையாது. அம்பாளுக்கு உண்டு. தேன்மலர் பொழிலணி சிறுகுடி என்னும் சம்பந்தர் வாக்குக்கேற்ப சுவாமிக்கு முன்னால் ஒரு தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன் வழியே தேனீக்கள் வந்து செல்லுமாறு அமைத்துள்ளனர். உற்சவ மூர்த்தங்களுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு காட்சி தருகிறார்.

திருவிழா:

அங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும்.

பிரார்த்தனை:

அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம். வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, இறைவனுக்கும் அம்மனுக்கும் புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

மாயூரத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் வந்து அரசலாற்றுப் பாலத்தைக் கடந்து, வலப்புறமாக செல்லும் கும்பகோணம் நாச்சியார் கோயில் சாலையில் சென்று கடகம்பாடி என்னும் ஊரையடைந்து அங்கிருந்து வலப்புறமாக செல்லும் சிறிய சாலையில் 3 கீ.மீ சென்றால் சிறுகுடியை அடையலாம். இப்பாதையில் பேருந்துகள் செல்லாது. இரண்டு சக்கர வாகனங்கள் கோயில் வரை செல்லும். கோயிலும், குருக்கள் வீடும் ஊர்க்கோடியில் உள்ளன. கடகம்பாடியில் வாடகை சைக்கிள் பெற்றுச் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *