அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர்

அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 98658 09768, 9787709742 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தான்தோன்றியப்பர் (சுயம்புநாதர்)
உற்சவர் ஆயிரத்தில் ஒருவர்
அம்மன் வாள்நெடுங்கண்ணி
தல விருட்சம் கொன்றை, பாக்கு, வில்வம்
தீர்த்தம் குமுத தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் யாருக்கு ஊர்
ஊர் ஆக்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்

ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம(அல்சர்) நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது.

மன்னனும் பல கோயில்கள் கட்டி வரும் போது ஆக்கூர்என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான். உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோயில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி கோயிலைச் சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார்.

அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள். ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும். மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, “ஏன் இந்த சோதனை. 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோயில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்என்று கெஞ்சுகிறான். மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் ஆயிரத்தில் ஒருவராகஅமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், “ஐயா, தாங்களுக்கு எந்த ஊர்என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் யாருக்கு ஊர்என்று மறுகேள்வி கேட்கிறார். இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது என்கின்றனர். மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர். ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீசுவரர்தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்ட அடையாளமாக இன்றும் கூட இலிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக்காணலாம்.

சிறப்புலி நாயன்மார் பிறந்து, வாழ்ந்து, முக்தியடைந்த தலம். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வது மிகவும் சிறப்பு. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானதாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழால் பாடியுள்ளார். அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று. கோயிலின் பின்புறத்தில் உள்ள விநாயகருக்கு பொய்யா விநாயகர்என்றுபெயர். இவர் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், “சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும், ஆனால் சுவர் இடிகிறதுஎன்கிறார். அதற்கு விநாயகர் இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கு. பதில் கிடைக்கும் என்கிறார். ராஜாவுக்கோ, குளத்தில் மூழ்கினால் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர் காசியை விட வீசம் அதிகம் இந்தக்குளத்தில்என்றார். குளத்தில் மூழ்கிய மன்னன் இறைவனை நினைத்து எழுந்தான். கூடவே கோயிலின் கர்ப்பக்கிரகமும் வந்தது. மகிழ்ச்சியடைந்த மன்னன் மீதி கோயிலைக் கட்டி முடித்தான்.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். கோயிலின் பெயர் தான்தோன்றி மாடம். ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரவாயிலில் வினாயகர் காட்சியளிக்கிறார். மாடத்தின் படிகளேறி மேற்சென்றால் கிழக்கு நோக்கி அம்பாள் சன்னிதி உள்ளது. உட்சுற்றில் பாணலிங்கம், விஸ்வனாதர், விசாலாட்சி, சிறப்புலி நாயனார், நால்வர், வினாயகர், முருகன், இலட்சுமி ஆகியோருடைய சன்னிதிகள் உள்ளன. அடுத்து ஆயிரத்துள் ஒருவர் என்ற மூர்த்தி உள்ளார். இவரே இத்தலத்து விசேட மூர்த்தியாவார். இச்சன்னிதி தனி விமானத்துடன் காட்சியளிக்கிறது. கோஷ்ட மூர்த்தங்கள் முறையாகவுள்ளன.

தேவாரப்பதிகம்:

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 46வது தலம்.

திருவிழா:

திருவாதிரை அன்று நடராஜர் வீதிஉலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும். மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திரி பிரதோஷம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பவுர்ணமி, போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

பிரார்த்தனை:

இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும். திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு.

நேர்த்திக்கடன்:

தோஷ நிவர்த்திக்காக குழந்தையை தத்து கொடுத்து எடுக்கிறார்கள். குழந்தைக்காக பவுர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை நிச்சயம்.

வழிகாட்டி :

மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 16 கி.மீ., தூரத்தில் ஆக்கூர் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *