அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-237 650 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீஸ்வரர்
அம்மன் சவுந்தராம்பிகை
தல விருட்சம் வில்வம், சந்தனம்
தீர்த்தம் வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவழுந்தூர்
ஊர் தேரழுந்தூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

ஒருமுறை பரமேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில், பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு ஆதரவாக சிவனைக் குறை கூறினார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால் தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால், பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே இவ்வூரிலுள்ள பெருமாளின் பெயர் ஆமருவியப்பன்என்றானது. பசுவாக மாறிய பார்வதி பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு, கடைசியில் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றாள். “சவுந்தர்ய நாயகிஎன இவளை அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம்.

பார்வதியைப் பசுவாக சபித்த சிவன் வருத்தமடைந்து, இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர்என்பதாகும்.

அகத்திய முனிவர் இத்தல இறைவனை பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது இதை அறியாத ஊர்த்துவரதன் என்னும் அரசன் வான் வெளியில் தேரை செலுத்தினான். அந்த தேர் செல்லாது அழுந்திய காரணத்தால் இத்தலம் தேரழுந்தூர்ஆனது.

இத்தல இறைவனை வேதங்கள், தேவர்கள், அஷ்ட திக் பாலகர்கள், முனிவர்கள் பூஜை செய்துள்ளனர். சிவனும், பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபம் இன்னமும் உள்ளது. சிவனும் சக்தியும் பிரிந்த காலத்தில், அவர்களை சந்திக்க இந்திரன் முதலான தேவர்கள் இங்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிவனைச் சந்திக்க, நந்தி அனுமதிக்கவில்லை. எனவே அஷ்டதிக் பாலகர்களும் இந்த ஊரைச்சுற்றி இலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த அஷ்ட இலிங்கங்கள் இன்றும் உள்ளன. காவிரிக்கும், அகஸ்தியருக்கும் இங்கு சாபவிமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது.

ஞானசம்பந்தர் குழந்தையாக இந்த ஊருக்கு வந்தபோது இரண்டு திசையிலும் இரண்டு கோபுரங்கள் உயர்ந்து இருந்ததால் எது சிவன் கோயில் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது இத்தலத்தில் இருந்த பிள்ளையார் அதோ ஈஸ்வரன் கோயில்என சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிள்ளையார் ஞானசம்பந்த விநாயகர்என அழைக்கப்படுகிறார். மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாலை 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர்.

தேவாரப்பதிகம்:

வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே யழுந்தை யவரெம் மானே எனமா மடமன் னினையே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 38வது தலம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமிக்கு பத்து நாள் முன்னதாக கொடியேற்றி தேர் திருவிழாவுடன் முடிகிறது.

பிரார்த்தனை:

தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *