அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91-4374-316 911, 4374-275 441

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாட்சிநாதர்
அம்மன் சவுந்தர நாயகி
தல விருட்சம் பாதிரி
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சாட்சிநாதபுரம்
ஊர் அவளிவணல்லூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

இத்தல இறைவனைப் பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இதில் மூத்த பெண் சுசீலையை அரசவைப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களைத் தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது, சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, கண்பார்வை இல்லாமல் அழகிழந்து காணப்பட்டாள். இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளைத் தன் மனைவியாக நினைத்து அழைத்தார். அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையைக் கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன், சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து அவள் தான் இவள்என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர்எனவும், இறைவன் சாட்சிநாதர்எனவும் ஆனார்கள்.

மூலஸ்தானத்தில் சிவன் இரிடபாரூடராய்க் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து, செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில், தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார். சிவனின் பஞ்ச ஆரண்யம் (காடு)” தலங்களில் இதுவும் ஒன்று.

திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவணல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

தேவாரப்பதிகம்:

நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகம்நிலை செய்து கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம் ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும் ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணல்லூரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 100வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை. தை அமாவாசையில் இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.

பிரார்த்தனை:

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் இத்தலத்தில் நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம் :

தஞ்சாவூரிலிருந்து (26 கி.மீ) திருவாரூர் செல்லும் வழியில் அம்மாபேட்டையில் இறங்கி வடக்கே 6 கி.மீ.தூரத்தில் அவளிவணல்லூர் உள்ளது. கும்பகோணத்திலிருந்து (20 கி.மீ.) அம்மாபேட்டை சென்று அங்கிருந்து வடக்கே 6 கி.மீ. தூரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *