அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்) திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்) திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-243 0349 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமேஸ்வரர்
அம்மன் தேனார் மொழியாள், சோமசுந்தரி
தீர்த்தம் மகாமக தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குடந்தைக்காரோணம்
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி, பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், “நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன்என்றார். இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு இலிங்கம் தோன்றியது. இந்த இலிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இறைவனுக்கு சோமேஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. அமுத குடம் உடைந்தபோது சிதறிய தீர்த்தம் இத்தலத்தின் முன்பு குளம்போல பெருகியது. இக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணிஎனப் பெயர். காலப்போக்கில் இக்குளம் அழிந்துவிட்டது.

முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம். ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோயிலில் சந்திரனும், வியாழனும் பூஜித்துள்ளனர். எனவே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்தது. இக்கோயிலுக்கு மூன்றுவாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். திருமால் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர்என்ற பெயர் ஏற்பட்டது.

கட்டைக்கோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார். கருவறை சுவர்களில் எட்டுபேர் வணங்கிய நிலையிலான சிற்பங்கள் உள்ளன. இத்தலத்தில் நடராஜப் பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு காணா நட்டம் உடையார்எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் பார்க்காமல் சென்றால், சென்றவருக்குத்தான் நஷ்டமே ஒழிய, இறைவனுக்கு ஏதும் இல்லை என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் வியாபார விருத்தி, தொழில் விருத்தி, உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் 1964ம் ஆண்டு பக்தர்கள் ஒன்றுகூடி வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்தனர். ஒருவர் ஒரு லட்சம் வீதம் 100 பேர் சேர்ந்து சிவாய நமஎன்ற பஞ்சாட்சர மந்திரத்தை எழுதினர். மொத்தத்தில் ஒரு கோடி மந்திரம் தேறியது. எழுதியவற்றை வீணாக்காமல் பைண்ட் செய்து நூறு புத்தகங்களையும் ஒரு பெட்டகத்தில் அடுக்கி, கோயிலில் வைத்துவிட்டனர். மிக அருமையான இந்த பெட்டகம் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேவாரப்பதிகம்:

முடியார் மன்னர் மடமான் விழியார் மூவுலகும் ஏத்தும் படியார் பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக் கொடியார் விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாருங் கடியார் சோலைக் கலவமயிலாக காரோணத்தாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 28வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி.

பிரார்த்தனை:

இக்கோயிலில் உள்ள கல்யாண விநாயகரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *