அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 – 98945 69543 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதர்
அம்மன் சோமகலாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் சோம தீர்த்தம், கருட தீர்த்தம், சடாயு தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழையாறை வடதளி, ஆறைவடதளி
ஊர் கீழ்பழையாறை வடதளி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்க, தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று, இத்தலத்தின் வழியே வந்தான். இதைக்கண்ட அசுரர்களுக்கும், கருடனுக்கும் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின. கருடன், தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது. சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.


சோழர் திருப்பணி பெற்ற கோயில். கிழக்கு பார்த்த சன்னிதி. எதிரில் குளம் இன்று சீர்கெட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்கை உருவமும் அழகுடையன.
பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது.

இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1) நல்லூர் 2)வலஞ்சுழி 3) சத்திமுற்றம் 4) பட்டீச்சரம் 5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது. இங்குள்ள கைலாசநாதரை ராஜராஜசோழன் தினமும் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கைலாச நாதரை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன், ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.
தேவாரப்பதிகம்:
குண்டரைக் குணமில்லரைக் கூறையில் மிண்டரைத் துரந்த விமலன்றனை அண்டரைப் பழையாறை வடதளிக் கண்டரைத் தொழுது உய்ந்தன கைகளே.
திருநாவுக்கரசர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 24வது தலம்.

திருவிழா:

ஐப்பசி பவுர்ணமி, திருகார்த்திகை, மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, கலைகளில் சிறந்து விளங்கவும், உடற்பிணி நீங்கவும், இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

கும்பகோணம் ஆவூர் சாலையில் முழையூர் சென்று அவ்வழியாக அடையலாம். பட்டீஸ்வரம் வந்து, அங்கிருந்து நடது வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *