அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், கும்பகோணம் வழி, வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்.
+91 94863 03484 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார், கவர்தீஸ்வரர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை, பங்கஜவல்லி | |
தல விருட்சம் | – | அரசு | |
தீர்த்தம் | – | பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்) | |
ஊர் | – | ஆவூர் (கோவந்தகுடி) | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு “கவர்தீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை, காமதேனுவின் கன்றான “பட்டி” என்ற பசு உணர்ந்தது. ஒரு இலிங்கம் அமைத்து, தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே அவரை நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் “பசுபதீஸ்வரர்” என்றும் அழைக்கப்பட்டார்.
வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். காமதேனு உலகிற்கு வந்த இடம் – கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று. கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறகிறது.
ஆவூர் ஊர்ப்பெயர், பசுபதீச்சரம் கோவிற்பெயர். இத்தலம் மாடக் கோவிலாக விளங்குகிறது. இவ்வூருக்கு அசுவத்தவனம் என்றும், இறைவன் விளங்கும் விமானம் அழகியமலை உச்சியைக் கொண்டுள்ளதால் மணிகூடம் என்றும் வழங்கப்படுகிறது.
பிரமன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தருவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்.
தர்மத்துவஜன் என்னும் அரசன் பிரமதீர்த்தத்தில் மூழ்கிக் குட்டநோய் நீங்கப் பெற்ற தலம். காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனதீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார்.
சங்க காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புடைய ஊராக விளங்கியது. ஆவூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய பெரும் புலவர்களைத் தந்த ஊர் இதுவாகும்.
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
கல்வெட்டுச் செய்தியில் “நித்தவிநோத வள நாட்டைச் சேர்ந்த ஆவூர்க்கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார்” என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இங்கு மூலவர் பசுபதீசுவரர் சுயம்புலிங்கவடிவில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் “பஞ்ச பைரவர்” தலம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. தேவாரத்தில் “பங்கயமங்கை விரும்பும் ஆவூர்” என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.
தேவாரப்பதிகம்:
நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தம் உள்ளம் கூறுடை யாருடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்தவூராம் தாறுடை வாழையிற் கூழைமந்தி தருகனி யுண்டுமிண் டிட்டினத்தைப் பாறிடப் பாய்ந்து பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடு நாவே.
–திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 21வது தலம்.
திருவிழா:
சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
வழிகாட்டி:
கும்பகோணத்திற்கருகிலுள்ள ஒரு கிராமம். குடந்தையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.
Leave a Reply