அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர்

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர், வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 93631 41676 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)
உற்சவர் கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்மன் கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி, கிரிசுந்தரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சப்தசாகரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநல்லூர்
ஊர் நல்லூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்துகிறார். “நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன்என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூல இலிங்கத்தின் பின்புறம் காணலாம்.

பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். “ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும்என நாரதர் கூறினார்.

நான் பெண், என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும்என்கிறாள் குந்தி. “அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று, கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வழி சொல்கிறேன்என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

63 நாயன்மாருள் ஒருவரான அமர்நீதியார் என்பவர் இத்தலதில் வாழ்ந்துவந்தார். இறைவனை துதிப்பதுவும், அடியாரைப் பேணுதலுமன்றி வேறெதுவும் அறியாதவர் அவர். அவருக்கேத்த நற்குல மங்கையொருவள் மனைவியாகவும், சிவப்பழமாகவொரு மகனும் இருந்தான். நல்லூருக்கு வரும் அடியார்களைப் பேணி, உபசரித்து அனுப்புவதையே அவர் தொண்டாகக் கொண்டிருந்தார். அவரை சோதிக்க எண்ணிய ஈசன், ஒரு வயதான கிழவர் வேடத்தில் நல்லூரில் அவர் வீட்டிற்கு வந்தார். சிவனடியாரைக் கண்ட அமர்நீதியார் பெருமகிழ்சியுற்று, அவரை நோக்கி, “பெரியவரே, தங்களின் வருகையால் இவ்வில்லம் மிகவும் புண்ணியம் செய்தது. தாங்களுக்கு எவ்வகையில் உதவ வேண்டும் என்று கட்டளையிட்டால் செய்துமுடிக்கத் தயாராக இருக்கிறேன். சொல்ல வேண்டும்என்று பணிந்து கூறினார். அதற்கு ஈசனோ, தான் கொண்டு வந்த ஒரு கந்தல் கோவணத்தைக் கொடுத்து, அதனைப் பாதுகாக்குமாறு கூறினார். அமர்நீதியாறும் அதனை வாங்கி பத்திரமாகப் பாதுகாத்து வைத்தார். குளத்திலிறங்கி குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்ற ஈசன் தன் திருவிளையாடலைத் துவக்கினார். மாயையால் அக்கோமணத்தை மறையச் செய்தார். திரும்ப ஒன்றுமே நடவாததுபோல் அமர்நீதியாரிடம் வந்து தன் கோவணத்தைத் தருமாறு கேட்டார். அமர்நீதியர் அதனை எடுத்துவர உள்ளே சென்று பார்க்கும்போது அது காணாதது கண்டு தவித்தார். ஈசனாகிய கிழவரிடம் மிகவும் வருத்தமுற்றவராய் வந்து, “ஐயனே மன்னிக்கவேண்டும். எனது இல்லத்திலிருந்த கோவணம் எங்கோ தொலைந்து விட்டது. நான் உங்களுக்கு புதிய கோவணம் ஒன்று தருகிறேன்என்றார். பிடிவாதமாக இருந்த கிழவரோ தனது கோவணம் ஒன்றே வேண்டும் என்றும், அமர்நீதியார் அதனை எங்கோ ஒளித்துவைத்துவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும் அக்கோவணத்தின் மதிப்பிற்கு எதனைக்கொடுத்தாலும் ஈடாகாது என்றார்.

அஞ்சியவாறு நின்றிருந்த அமர்நீதியார், கிழவரிடம் மன்னித்தருள வேண்டினார். தனக்கொரு உபாயம் சொல்லுமாறு வேண்ட, ஈசன் தன்னிடம் அதுபோன்று மற்றுமொரு கோவணம் இருப்பதாகவும், அதற்கு ஈடான பொருள் தந்தால் மன்னித்துவிடுவதாகவும் கூறினார். மகிழ்வுடன் சம்மதித்த அமர்நீதியார் அதற்கு துலாபாரம் ஒன்று கொண்டுவர ஏற்பாடு செய்தார். ஈசன் தனது ஒரு கோவணத்தை ஒரு துலையில் வைக்க, அமர்நீதியார் பொன்னும் பொருளும் அணிகலன்களும் மற்றுமொரு துலையில் வைத்தார். வைக்க வைக்க கோவணம் இருந்த பக்கம் தாழ்ந்தே இருந்தது. தனது அத்தனை உடைமைகளையும் வைத்த பின்னும் துலை சமமாகாததால்,

நல்லூர் ஈசனை வணங்கி, தானும் தன் குடும்பத்தினரும் துலையில் ஏறப்போனார். அப்போது கிழவர் மறைந்து, ஈசனும், உமாதேவியும் காட்சியளித்தனர். அமர்நீதியாரும், குடும்பத்தினரும், சுற்றத்தாரும் அதுகண்டு பேரானந்தமடைந்து ஈசனுடன் கலந்து இன்புற்றனர். இவ்வைதீகம் இன்றும் அமர்நீதியார் வழிவந்த குலத்தோன்றல்களால் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. அமர்நீதியார் இல்லம், கோயிலுக்கு எதிரே சப்த சாகர குளத்தின் கரையில் மடமாக உள்ளது. சற்றே சிதிலமடைந்துள்ளது.

கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். கிராமத்தின் நடுவில், அழகாக அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த கோயில். 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கிறது. கோயிலுக்கு வெளியிலேயே தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், வினாயகர் உள்ளனர். சற்றே விசாலமான இடம். கொடிமரத்தின் வடக்கே வசந்த மண்டபமும், தெற்கே அமர்நீதி நாயனார் துலையேறிய மண்டபமும் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென் பகுதியில் அஷ்டபுஜ காளி சன்னிதி உள்ளது. இது இவ்வட்டாரத்தில் பெரும் பிரசித்தி பெற்றது. உள்கோபுரம் 3 நிலைகள் உடையது. கொடிமரம் தாண்டி உள்ளே உள்சுற்றினுள் நுழைந்தால் காசி வினாயகர் காட்சியளிக்கிறார். விசுவனாதர் சன்னிதி உள்ளது. உள்ளே நடந்தால் அடுத்து வருவது சோமாஸ்கந்தர் மண்டபம். உற்சவ நாட்களில் இங்கிருந்து சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. முருகன் சன்னிதி பொலிவுடன் உள்ளது. மேலும் சுற்றி வந்தால் அமர்நீதி நாயனார், அவர்தம் மனைவி மற்றும் குழந்தை உருவங்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்கள் அவைக்குறிய இடங்களில் உள்ளன.

சுற்று முடித்து படிகளேறி கட்டுமலை மீது ஏறினால் நேரே தெரிவது அம்பிகை. அம்மனின் பெயர் கிரிசுந்தரி.” தெற்கு பார்த்த நெடிய உருவம். அங்கேயே நம்மை கட்டிப்போடும் அழகு.

அங்கிருந்தவாறே இடப்பக்கம் திரும்பினால் காட்சிதருவது மூலவர். இவ்வாறு அமைப்பு மிகப்பழைய கோயில்களில்தான் உண்டு என்று சொல்லப்படுகிறது. மூலவர் சற்றே பெரிய மூர்த்தம். ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறும் அமைப்பை உடைய திருமேனி. 6 நாழிகைக்கு ஒரு முறை. வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். ஆகவேதான் பஞ்சவர்ணேஸ்வரர்என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கத்தில் பல துளைகள் உள்ளன.

பிருங்கி என்ற முனிவர் சிறந்த சிவ பக்தராவார். அவர் ஈசன் மட்டுமே உண்டு என்றும் அம்பிகையை நினையாமலும் வாழ்ந்துவந்தார்.

அவருக்கு அம்பிகையின் அருமையை எடுத்துக்காட்டவேண்டி ஈசன் அவர் கனவில் அம்பிகையும் சிவனும் ஒன்றே எனவும், அவர்கள் பிரிக்க முடியாதவர்கள் என்றும், எங்கும் நீக்கமற நிறைந்தவர்கள் என்றும் உணர்த்தினான். இதனைச் சோதிக்க விழைந்த பிருங்கி முனிவர், சிவலிங்கத்தின் உள்ளும் பார்த்துவிடுவது என்று முடிவுசெய்தவராக, ஒரு வண்டு வடிவம் எடுத்து இலிங்கத்தின் உள்ளே துளையிட்டு பார்த்து வந்தார். எங்கு காணினும் சக்தியும் சிவமும் சேர்ந்தே இருக்கக்கண்டு, வெட்கித் தலை குனிந்து ஈசனிடமும் அம்பிகையிடமும் மன்னிப்புக் கேட்டார் என்பது வரலாறு.

சிவலிங்கத்தின் பின்னால், அகஸ்திய முனிவருக்கு திருமணக்கோலம் காட்டியருளிய கல்யாணசுந்தரேஸ்வரர் உருவம் சுதைவடிவில் உள்ளது. இருபுரமும் பிரம்மனும், விஷ்ணுவும் காட்சிதர, அகஸ்தியர் கை கூப்பி வணங்குவது போன்று உள்ளது. அற்புதமான காட்சி. ஆனால் இருட்டாக இருப்பதால் அர்ச்சகர் தீபாராதனை காண்பிக்கும் பொழுது பார்த்தல் நல்லது. ஏனெனில் கட்டுமலையில் சிறு சிறு சாளரங்களே உள்ளன. மூலவருக்கு அருகில் அகஸ்திய இலிங்கம் உள்ளது. மூலவரைச் சுற்றி வர, குறுகலான சிறு பிரகாரம் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயில் மட்டுமே பயனில் உள்ளது. மேற்கு வாயில் பூட்டப்பட்டே உள்ளது. காரணம் தெரியவில்லை.

இத்தலத்தில் தான் சிவபெருமான் நாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப்போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் எனக் கூறப்படுகிறது. இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும், பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை, அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது. இத்தலத்தில் தான் அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டார். அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள்.

இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விசுவநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

தேவாரப்பதிகம்:

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடம் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பல்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியதும் சந்தனக்காப்பு, முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

வழிகாட்டி:

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசம் வந்து, அங்கிருந்து மேலும் 3 கீ மீ சென்றால் உத்தாணி ரயில்வே கேட் வருகிறது. அந்த இடத்தில் வலங்கைமான் செல்லும் சாலையில் 1 கீ மீ சென்றால் நல்லூர் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து வருபவர்கள் இதுபோலவே வரலாம். அல்லது, சுந்தரப்பெருமாள் கோயில் வழியாகவும் வரலாம். கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கோயில் வாசல் வரை செல்லும்.

திருநல்லூர் பெருமணம்என்று ஒரு தலம் உள்ளது. அது வேறு. அத்தலம் தற்போது ஆச்சாள்புரம்என்று அழைக்கப்படுகிறது.

2 Responses to அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர்

  1. SRajan says:

    இந்த ஊருடன் சேர்ந்த மற்றைய சப்தஸ்தான தலங்கள் யாவை என்பது தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்தவும்

  2. சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்கள்: திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *