அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம், சித்தூர், ஆந்திரா

+91- 8573 – 281 540, 281 640, 281 747 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – வரசித்தி விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காணிப்பாக்கம்

மாவட்டம்: – சித்தூர்

மாநிலம்: – ஆந்திரா

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களால் பேசமுடியாது; பார்க்க முடியாது; கேட்க முடியாது. இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த இன்னல் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்கச் சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.

ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றனர்.

பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.

விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர்.

சத்தியப் பிரமாணம்:

தினமும் மாலை சத்தியப்பிரமாணம்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் சத்தியப்பிரமாணம்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள்.

திருவிழா: – விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப் புத்தாண்டு.

கோரிக்கைகள்:

இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோடம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்

கணவன் மனைவி பிரச்னை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் முழுக்காட்டு, கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூசை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *