அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – விநாயகர்

பழமை: – 200 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆத்தூர்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஆத்தூர் நகரத்தில் வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிட்டை செய்தனர். வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், “வெள்ளம் பிள்ளையார்என்று பெயரும் சூட்டினர். காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார்.

பிள்ளையார் அமர்ந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்தும் பிள்ளையாரைச் சுற்றி அமைந்தன. போக்குவரத்து அதிகரித்தது. இவ்விடத்தை தாண்டிச் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகரை வணங்கிச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு காரியம் கைகூடவே, இவர் வாகனப் பிள்ளையார்என்ற பெயர் பெற்றார். விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. பிள்ளையார் முன்பு ஒற்றை மூஞ்சூறு வாகனம் இருக்கும். மகாராட்டிரத்தில் இரட்டை மூஞ்சூறு வாகனங்களைப் பார்க்கலாம். ஆனால் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ள வித்தியாசமான கோயில் இது.

இக்கோயிலில் முக்கிய பூசையே வாகனங்களுக்குத் தான். புதிய வாகனம் வாங்குவர்கள் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவை முடித்து விட்டுப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து விடுவார்கள். அங்கு வாகனத்திற்கு விநாயகர் முன்னிலையில் பூசை முடிந்த பிறகே பயன்படுத்துகிறார்கள். ஆயுதபூசை காலத்தில், ஏராளமான வாகனங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும்.

இதுதவிர அர்ச்சனை, திருமுழுக்காட்டு ஆகியவை நடத்தப்படுகிறது.

மணமக்கள் அழைப்பு :

இங்கு மற்றொரு சிறப்பம்சம் பெண், மாப்பிள்ளை அழைப்பு வைபவமாகும். வீட்டிலிருந்து பெண், மாப்பிள்ளை அழைப்பதை விட, இந்த கோயிலில் இருந்து அழைத்துச் செல்வதால், மணமக்கள் நிறைந்த ஆயுளுடன் வாழ்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், கோயிலிலேயே திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது.

திருவிழா: – விநாயகர் சதுர்த்தி

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *