அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296 – 273 113, +91- 94431 39503

காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்)
அம்மன் கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி
ஊர் அவிநாசி
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

சுந்தரர், இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனைக் கோயிலுக்கு வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்நடக்கிறது.

காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் மதியம் இடைவேளையில்லாமல் கோயில் திறந்தே இருக்கும்.

விநாசம்என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் சேர்த்தால் அவிநாசிஎனப்படும். இது அழியாத்தன்மை கொண்டது எனப்படும்.

வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் சொல்கிறது. அவர் சனிபகவானை தனிசன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். இடதுகாலை பீடத்திலும், வலது காலைக் காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார். இங்கு தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருளுகின்றனர். இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள். சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். மாணிக்கவாசகர் மதுரையிலிருந்தபடியே அவிநாசியை பாடியுள்ளார்.


சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்த வடிவிலானது. தியானம், பூஜை முறை தெரியாதவர்கள் மனமுருகி சிவனையும் அம்மனையும் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்கிறார்கள். இத்தல இறைவன் திருடனுக்கும் முக்தி கொடுத்துள்ளார். பைரவருக்கு அருகே வியாதவேடர் என்ற திருடனுக்கு சன்னதி உள்ளது சிறப்பு. இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென்திசையில் தெட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். சிவசூரியன் தனி சன்னதியில் அருளுகிறார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.

கருணாம்பிகை சன்னதியின் பின்புறம் உள்ள விருச்சிகத்தை, விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடுகிறார்கள். தேள்கடி, மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சன்னதியில் வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர். விருச்சிகத்தை வணங்கும் முன், நுழைவு வாயிலில் குபேர திசையான வடக்கு நோக்கியுள்ள செல்வ கணபதியை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.

64 பைரவ முகூர்த்தத்தில் இத்தல பைரவர் ஆகாச காசிகா புராதனாத பைரவர்எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் எனத் தலபுராணம் கூறுகிறது. இவர் உள்பிரகாரத்தில் இருப்பது சிறப்பு. சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியான சிறப்பு பெற்றவர் என இவரை கூறுகிறார்கள்.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தெட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

மைசூர் மகாராஜா வம்சத்திற்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பதவியேற்றபின் காசிக்குச் சென்று இலிங்கம் எடுத்துவந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களாம். இத்தலத்திற்கு அருகிலேயே மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமான திருமுருகன்பூண்டி இருக்கிறது. கோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற புடைப்புச்சிற்பம் உள்ளது. 63நாயன்மார் சன்னதியில் விநாயகர் இருப்பார். இங்கு, பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சி உள்ளனர்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோத்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது எனத் தலபுராணம் கூறுகிறது.

தேவாரப்பதிகம்:

எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.

சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.

திருவிழா:

சித்திரையில் பிரமோத்சவம், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா. இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு.

பிரார்த்தனை:

இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

இத்தலத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம். எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க, பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை இராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

வழிகாட்டி:

திருப்பூரிலிருந்து (13கி.மீ) கோயம்புத்தூர் செல்லும் வழியில் அவிநாசி உள்ளது. அருகிலேயே மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமான திருமுருகன்பூண்டி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *