அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை, திருச்சி மாவட்டம்.

+91-94431 50332, 94436 50493 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உஜ்ஜீவநாதர்
அம்மன் அஞ்சனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை
ஊர் உய்யக்கொண்டான் மலை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்தார். சிவபெருமான் அவரிடம், “உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள, ஆனால் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும், அறிவும் மிக்க, 16 வயது வரையே ஆயுள் உள்ள மகன் வேண்டுமாஎனக் கேட்டார்.

குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார். மகனும் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். பதினாறு வயதும் வந்தது. எமன் துரத்தினான். மார்க்கண்டேயர் பல சேத்திரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தார். இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார். தன்னை எமன் துரத்துவதை ஈசனிடம் சொன்னார். இறைவன் அச்சிறுவனைப் பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.

இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை மூதேவிஎன்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள். இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். மேரு வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு. இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. அதுபோல, உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள். ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள். ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை மாடன்என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள். இவளை வாக்தேவதை(சேடி) என்கிறார்கள். ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். அவள் தனது சேடியான (பணிப்பெண்) வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி அஞ்சனாட்சிஎன வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகைஎனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது. மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி உஜ்ஜீவநாதர்எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் கற்பகநாதர்என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். கோயில் மலை மேல் உள்ளது. கற்கோயில். கிழக்கு நோக்கிய முகப்பு வாயில். படிகள் மீது ஏறி மேலே செல்லும்போது இடப்பக்கம் வினாயகர் உள்ளார். மேலேறிச் சென்றால் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. அதன் முன்பு மார்க்கண்டனைக் காப்பதற்காக, எமனைத்தடுப்பதற்காக கருவரை நீங்கி வந்த சுவாமியின் பாதம் உள்ளது. மேலும் படிகளேரி உட்சென்றால் முதலில் அஞ்சனாக்ஷி அம்பாள் சன்னிதி உள்ளது. இது பழைய சிற்பம். மேற்கு நோக்கியது. இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோயுள்ளது. இதனால் புதிய அம்பாளை பிரதிஷ்டை செய்துள்ளனர். எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளனர். இரு அம்பாளுக்கும் நித்திய வழிபாடு நடைபெருகின்றது. புதிய அம்பாள் பாலாம்பிகை சன்னிதி கிழக்கு நோக்கியது.

உள்ளே நுழைந்ததும் நேரே தக்ஷிணாமூர்த்தி தரிசனம். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் வினாயகர் சன்னிதியும், வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னிதியும் உள்ளன. கஜலக்ஷ்மி, ஜேஷ்டா தேவி, பைரவர், சனீஸ்வரர், சூரிய பகவான் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

மூலவர் ஸ்வயம்பு. மேற்கு நோக்கியவாறு உள்ளார். சதுர ஆவுடையார். அழகாக உள்ளார். மூலவருக்கு நேரே மண்டபத்தில் நடராஜா சன்னிதி உள்ளது. பக்கத்தில் பிட்சாடனர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் ஆகிய அழகான உற்சவ மூர்த்திகள் உள்ளன.

மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, “உயிர்கொண்டார்என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

மலைக்கோயில் ஓம்வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும். பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை, இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், “திருப்புகழ் பாடும் அறிவைக்கொடுஎன வேண்டிப் பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு. கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம் நடக்கும். சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். ஞானவாவி தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது.

தேவாரப்பதிகம்:

தண்டமர் தாமரை யானும் தாவியிம் மண்ணை யளந்து கொண்டவனும் மறிவொண்ணாக் கொள்கையர் வெள்விடை ஊர்வர் வண்டிசை யாயினபாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயில் ஆடும் கற்குடி மாமலை யாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 4வது தலம்.

திருவிழா:

பங்குனியில் பிரம்மோத்சவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.

பிரார்த்தனை:

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

ஜேஷ்டாதேவிக்கு புத்தாடை அணிவித்து வழிபடுகிறார்கள்.

வழிகாட்டி:

தேவாரத்தில் கற்குடி எனப்பட்ட இத்தலம் தற்போது உய்ய கொண்டான் மலை என்று வழங்கப்படுகிறது. திருச்சி மாநகரின் வடமேற்கில் அமைந்துள்ளது. திருச்சி வயலூர் சாலையில் உள்ளது. பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *