அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்.

+91- 99408 43571 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)
அம்மன் பசும்பொன் மயிலாம்பிகை
தல விருட்சம் பராய் மரம்
தீர்த்தம் அகண்ட காவேரி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்பராய்த்துறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்

முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம்எனப்பட்டது. இப்பகுதியில் வசித்த முனிவர்கள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று ஆணவமும், அவர்களது மனைவியர்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர். சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராகக் கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.

மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரைப் பின்தொடர்ந்தனர்.

சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட முனிவர்கள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரைத் தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் சிவனுடன் சண்டையிட்டனர். அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன். சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய முனிவர்கள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாகக் காட்சி தந்தார். உண்மை உணர்ந்த முனிவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி, சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார்.

பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார்.

பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது.

சுவாமியும் பராய்த்துறை நாதர்என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள்கூட வருவதில்லை. இது வித்தியாசமானதாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் ஆகியோர் இத்தலம் மற்றும் சுவாமியைக் குறித்து பாடியுள்ளார். இத்தலத்தின் அருகேயுள்ள காவேரியை அகண்ட காவேரிஎன்கின்றனர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் காவேரி, கொள்ளிடம் என இரண்டு நதிகளாக இது பிரிகிறது.

மாயூரத்தில்(மயிலாடுதுறை) ஐப்பசிமாதம் கடைசி நாளன்று கடை முழுக்குஎனும் துலா ஸ்நானம் நடப்பதுபோல இங்கு ஐப்பசி மாதம் முதல் தேதியில் காவேரிக் கரையில் முதல் முழுக்குஎனும் துலாஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். இந்நாளில் காவேரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார்.

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். கோயில் ராஜகோபுரம் 7 நிலை உடையது.

கருவறைக்கு பின்புறம் கோஷ்டத்தில் இலிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி தனி மண்டபம் போன்ற அமைப்பில் கோஷ்டத்தில் காட்சி தருகிறார். முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவலிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்றகோலத்தில் இருக்கிறார். இவரை பரளி விநாயகர்என்கின்றனர். சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.

தேவாரப்பதிகம்:

நீறு சேர்வதுஓர் மேனியர் நேரிழை கூறுசேர்வதோர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே

 

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 3வது தலம்.

திருவிழா:

வைகாசியில் பிரம்மோத்சவம், ஐப்பசியில் முதல்திகதியில் துலா முழுக்கு விழா.

பிரார்த்தனை:

பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும்; பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சு வரும்; அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *