அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்.

+91- 99438 82368 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆலந்துறையார்(வடமூலநாதர்)
அம்மன் அருந்தவ நாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பழுவூர்
ஊர் கீழப்பழுவூர்
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம்,”விளையாட்டாகத் தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்என்றார்.

அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகிஎனப்படுகிறாள்.

பழுஎன்றால் ஆலமரம். எனவே சுவாமி ஆலந்துறையார்எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் திருப்பழுவூர்என பெயர் பெற்றது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியது. கோயில் எதிரில் குளம் உள்ளது. அம்பாள் சன்னிதி தனியே உள்ளது. அர்த்தமண்டப சுவரையொட்டி காலசம்காரர், அர்த்தனாரீசுவரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. தென்புற மேடைமீது அறுபத்துமூவர், திரிபுராந்தகர், ரிஷபாரூடர் ஆகியோரது உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் துர்கை, திருநாவுக்கரசர், சம்பந்தர், வினாயகர், வீரபத்திரர், சப்தமாதர்கள் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இறைவன் நேரே பார்த்தல் தெரிகிறார். மிகவும் அழகான மூர்த்தம். நாடோரும் 4 கால பூஜைகள் நடைபெருகின்றன. 1974 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது . பங்குனியில் நடைபெரும் விழாவில் 3 ஆம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள சமதக்னி முனிவருக்கு காட்சி தரும் ஐதீகம் நடைபெருகிறது.

இத்தலம் முதலாம் பராந்தகன் காலத்திலேயே கற்றளியாக எடுக்கப்பட்டது. இத்தலத்துள் உள்ள மற்றொரு சிவாலையம் பசுபதீஸ்வரம். இதன் பழைய பெயர் மறவனீசம். இச்சிவாலயம் பழுவேட்டரைய மன்னன் மறவன் என்பவன் மகன் கண்டன் என்பவன் கட்டியதாகும். சோழர் கல்வெட்டுக்களிலிருந்து பார்க்கும்போது அதிகாரிகளான பழுவேட்டரையர்கள் என்னும் பட்டம் பெற்ற கூட்டத்தினர் சிலர் அக்காலத்தில் கோயில் காரியங்களை கவனித்து வந்ததாகத் தெரிகிறது . குலோத்துங்கன், ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. அவர்கள் இவ்வாலத்திற்கு பொன்னாபரணங்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் வழங்கியது தெரிகிறது.

இத்தல சிவனுக்கு சாம்பிராணித்தைலம் பூசப்படுகிறது. இலிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் பரசுராம தீர்த்தம்எனப்படுகிறது. சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேசுவரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியக் கதிர்கள் இத்தல இறைவனின் மீது விழுகிறது. வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,”நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமேஎன்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

தேவாரப்பதிகம்:

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர்
மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள்
பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம்.

திருவிழா: – பங்குனி உத்திரம்

பிரார்த்தனை:

பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்குதல்.

வழிகாட்டி:

திருப்பழுவூர் எனும் இதன் பெயரை மக்கள் தற்போது கீழப்பழுவூர் என வழங்குகின்றனர். திருச்சி அரியலூர் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்தும் நிறைய பேருந்துகள் உள்ளன. பேருந்து நிலையத்திற்கு அருகில் கோயில் உள்ளது.

2 Responses to அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்

  1. ஒன்றும் புரியவில்லயே, நண்பரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *