அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4362 326 668 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆபத்சகாயர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் கதலி(வாழை), வில்வம்
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பழனம்
ஊர் திருப்பழனம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம்என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் . சிலாத முனிவருடைய மகனான நந்திக்கு திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. நந்தியும் ஈசனுடைய பிள்ளை போன்றவராதலால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார். அவ்வூர்வலம் திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.

திருமண நாளன்று ஈசன் கண்ணாடிப்பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடன் மனைவி ஸ்வயம்ப்ரகாசையுடன் இருக்க, ஏழூர் உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான ஐதீகமாகும் . இதில் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் ஏழூருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து செல்லப்படுகிறது. வாகனம் பயன்படுத்தப்படுவது இல்லை. சித்திராபௌர்ணமியன்று இவ்விழா நடைபெருகிறது.

கௌசிக முனிவர் தனக்களிக்கப்பட்ட அமிர்தத்தைக் கொண்டு, அதனோடு மணலைப்பிசைந்து சிவலிங்கம் செய்தார் என்று கூறப்படுகிறது. சந்திரன், குபேரன், இந்திரன், திருமால், திருமகள் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். ஒருமுறை இறைவனைப் பூஜிக்க, திருமால் வந்து தங்கினார். அவரைத் தேடிவந்த இலக்குமி வந்து பயனடைந்து சென்றதால் ப்ரயாணபுரி என்று பெயர் உண்டு.

முன்பொருகாலத்தில் கௌதம நதி தீரத்திலிருந்து சுசரிதன் என்ற அந்தணச்சிறுவன் தலயாத்திரையாக திருப்பழனம் வந்தடைந்தான். சிறுவனைத் துரத்தியபடி வந்த எமதர்மன், அவன் கனவில் தோன்றி அவன் மரணமடையப்போவதாகக் கூறினான். சிறுவன் அச்சத்தில் இத்தலத்து ஈசனை வேண்டித் தன்னைக் காக்குமாறு கூறினான். சரணடைந்த சிறுவனைக் காக்க ஈசன் அசரீரியாகத் தோன்றி திருவையாற்றுக்கு வருமாறு பணித்தார். திருவையாற்றிற்கு வந்த சிறுவனைக் காத்தார் என்று வரலாறு கூறுகிறது. பழனத்தில் சிறுவனை ஆபத்திலிருந்து மீட்டதால் இவ்விறைவன் ஆபத்சகாயேஸ்வரர்என்றழைக்கப்படுகிறார்.

திருநாவுக்கரசர் இத்தலத்திலிருந்தவாறே அருகிலுள்ள திங்களூரை பற்றி பாடிச்சென்றார். ஆகவே திங்களூர் வைப்புத் தலமாகிறது. இத்திங்களூர் சந்திரன் தலமாகும்.

தலத்தின் வேறு பெயர்கள் கதலீவனம், கௌசிகாசிரமம், ப்ரயாணபுரி, பழனப்பதி என்பனவாம். இறைவனின் பிறபெயர்களாவன அமுதலிங்கேசர், சுதாலிங்கமூர்த்தி, கரிதலேஸ்வரர், பழனநகரார். சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம்.

இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்

3 நிலைகள் கொண்ட பழமையான ராஜ கோபுரம். வெளி கோபுரத்திலிருந்து சுமார் 100 அடிகள் தொலைவில் உள்கோபுரம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் வலப்புரம் மங்களதீர்த்தம் பயனின்றிக் காட்சியளிக்கிறது. சிதிலமடைந்துள்ளது. இவை செப்பனிடப்படுவதாகத் தெரிகிறது. மற்ற தீர்த்தங்கள்: காவிரி, தேவ தீர்த்தம், மற்றும் அமுத தீர்த்தம். சுப்பிரமணியர், வினாயகர் சன்னிதிகள் உள்ளன. முன்மண்டபத்தின் வாயிலிலேயே குழந்தைகள் பள்ளிக்கூடம் ஒன்று இயங்குகின்றது. மண்டபத்தின் உள்பகுதி வாகன மண்டபமாகப் பயன்படுகிறது. மண்டபத்தின் உள்ளே சென்றால் சப்த கன்னியர்கள், வினாயகர், வேணுகோபாலர் சன்னிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி நின்ற நிலையிலும், தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி நின்ற நிலையிலும், மேற்கு திசையில் அண்ணாமலையார் நின்ற நிலையிலும், வடக்கே பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளனர். அர்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கூப்பிய கரத்துடன், உடைவாளுடன் உள்ளார். சுவாமி சன்னிதிக்குப் பின்புரம் பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கவேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் இருக்கிறார். இது எங்கும் காணமுடியாத சிறப்பாகும். நேரே தெரிவது மூலவர். இருட்டில் இருக்கிறார். உயர்ந்த பெரிய மூர்த்தம். எவ்வித விளக்குகளும் நாம் சென்றபோது இல்லை. தற்போது இருக்கலாம். வழக்கம்போல் வெளவால்கள். ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி அம்மன் உறைகிறார்.

அம்பாள் வெளிப்பிரகாரத்தில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக்கோயிலில் உறைகிறார். தலமரமான வாழை உள்ளது.

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.

தேவாரப்பதிகம்:

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.

திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 50வது தலம்.

திருவிழா:

ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

கோரிக்கைகள்:

திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

திருவையாற்றிலிருந்து 3 கீ மீ தொலைவில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 3 ஆவது கீ மீ காவிரிக்கரையருகே அமைந்துள்ளது இத்தலம். தஞ்சை மற்றும் குடந்தையிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *