அருள்மிகு கோடீஸ்வரர் (கைலாசநாதர்) திருக்கோயில், கொட்டையூர்

அருள்மிகு கோடீஸ்வரர் (கைலாசநாதர்) திருக்கோயில், கொட்டையூர், தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம்.

+91 435 245 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன் பந்தாடு நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமுதக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கொட்டையூர், கோடீச்சரம், பாபுராஜபுரம்
ஊர் கொட்டையூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

திரிகர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் சிவபெருமானை வணங்கினான். அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார். அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது. பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள். கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்.

ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் இலிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர்என்று பெயர் பெற்றது. பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தன்னுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர்எனப்பட்டார்.

மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இங்கே அம்பாள் பந்தாடுநாயகிஎன அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. நாம் செய்த பாவங்களைத் தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாக நம்பிக்கை. கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

கொட்டையூரில் கால் வைத்தால் கட்டைஎன்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும். எனவே பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு ஒரு காலத்தில் வராமலே இருந்தார்கள். அவர்களுக்கு பந்தாடு நாயகி ஆறுதல் கூறி பாவங்களை உதைத்து எறிந்தாள். தீராத பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனம் திருந்தி செல்லலாம். இத்தலத்தில் தத்தம்வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

தேவாரப்பதிகம்:

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய் இடியார் கடுமுழக்கே ஊர்ந்தான் கண்டாய் எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய் மடலார் திரைபுரளும் காவிரி வாய் வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரில் கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 44வது தலம்.

திருவிழா:

பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.

பிரார்த்தனை:

தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

இத்தலத்தில் நீராடி, தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம். (அழகிய வடிவம் கிட்டாவிடின் நான் பொறுப்பல்ல.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *