அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி
அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 94421 67104 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாலுகந்தநாதர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | ஆத்தி | |
தீர்த்தம் | – | மண்ணியாறு | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வீராக்கண், திருஆப்பாடி | |
ஊர் | – | திருவாய்பாடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி, தன்னை மேய்க்கும் இடையனை முட்டப் பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது.
விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார்.
சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,”என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்” எனக் கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி “சண்டிகேஸ்வரர்” ஆக்கினார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது சிறப்பு.
இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் “பாலுகந்தநாதர்” ஆனார். விசாரசருமன் “ஆ“(பசு) மேய்த்த தலமாதலால், “ஆப்பாடி” ஆனது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். முன் மண்டபம் வவ்வால் நெற்றி அமைப்புள்ளது. வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், நடராஜர் சபை, பைரவர் சன்னதிகள் உள்ளன.
தேவாரப்பதிகம்:
ஆதியும் அறிவுமாகி அறிவுனுட் செறிவுமாகிச் சோதியுட் சுடருமாகித் தூநெறிக்கு ஒருவனாகிப் பாதியிற் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகி வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 40வது தலம்.
திருவிழா:
சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை:
பதவி உயர்வு, பணி இடமாற்றம் விரும்புவோர் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply