அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், திருநின்றியூர் போஸ்ட், எஸ்.எஸ். நல்லூர் வழி, சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 4364 – 320 520 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாலட்சுமீஸ்வரர்
அம்மன் உலகநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் நீலப்பொய்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திரிநின்றஊர்
ஊர் திருநின்றியூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

ஜமதக்னி மகரிஷி, தன் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னியும் இந்த பாவத்துக்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர்என்றும், அம்மன் உலகநாயகிஎன்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர்என்று பெயர் பெற்றது.

சிதம்பரம் நடராஜரைத் தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன், இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப்போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா? எனக் கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் இலிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது, சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது, இரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் கோயில் எழுப்பி வழிபட்டார். திரி அணைந்த தலம் என்பதால், “திரிநின்றியூர்என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் திருநின்றியூர்என்றும் பெயர் பெற்றது.

நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷம் நட்சத்திரத்திலோ, தங்களது பிறந்தநாளிலோ, திருமணநாளிலோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ, இத்தல சிவனக்கு சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும்.

இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. தலத்தின் தலவிநாயகராக செல்வகணபதி அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார்.

தேவாரப்பதிகம்:

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் மல்கி அயலெலாம் நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்.

திருவிழா:

ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மற்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *