அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ராஜகணபதி

பழமை: – 400 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – சைலதேசம்

ஊர்: – சேலம்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

400 ஆண்டுகளுக்கு முன் சேலம் ராஜகணபதி கோவில் கட்டப்பட்டது. கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. இத்தலம் காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் சைலதேசம்என பெயர் பெற்றது.

சேலம் வரும் பக்தர்கள் அனைவரும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். தேவர்கள் கணபதியை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரசுவதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராச்சியத்தைப் பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தியது. சுகவனேஸ்வரர் திருக்கோயில் இத்தலத்தின் மிக அருகில் அமைந்துள்ளது.

இவர் தினமும் அரச அலங்காரத்தில் காட்சி தருவதால் ராஜ கணபதிஎன அழைக்கப்படுகிறார்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து திருமுழுக்காட்டும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை, சதுர்த்தி நாளில் கணபதி யாகம், சிறப்பு திருமுழுக்காட்டு ஆராதனையும் நடக்கிறது. ஆவணியில் சதுர்த்தி விழா பத்து நாள் நடக்கிறது. இதில் மூன்றாம் நாள் திருக்கல்யாண நிகழ்வும், 10ம் நாள் மலர்ப் பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும். இந்நாட்களில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. விழாவில் முதல் நாளான சதுர்த்தியன்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துபடியும், 8ம் நாள் முத்தங்கி சேவையும் மிக சிறப்பாகும்.

ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டலாம்.

சுவாமிக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *