அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை, சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2441 0477 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மருந்தீஸ்வரர்
உற்சவர் தியாகராஜர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பஞ்ச தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவான்மீகியூர்
ஊர் திருவான்மியூர்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு, சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் பால்வண்ணநாதர்என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த இலிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.

தன்னை வணங்கித் திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது.

பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.

அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கித் தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன், உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் மருந்தீஸ்வரர்எனப்படுகிறார்.

அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், “சிவனே. உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?” என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது. மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

தேவாரப்பதிகம்:

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.

திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.

திருவிழா:

பங்குனி பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை. பிரார்த்தனை:

சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் புத்தாடை அணிவித்து வணங்குதல்.

இருப்பிடம் :

சென்னை திருவான்மியூரில் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் அமைந்துள்ளது. திருவான்மியூருக்கு பஸ் வசதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *