அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில், தீவனூர்

அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில், தீவனூர், விழுப்புரம் மாவட்டம்

+91- 94427 80813(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர்: – நெற்குத்தி விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு

ஊர்: – தீவனூர்

மாவட்டம்: – விழுப்புரம்

மாநிலம்: – தமிழ்நாடு

தலவரலாறு

ஆடுமேய்க்கும் சிறுவர்கள் சிலர் வயல்களில் நெற்கதிர்களை பறித்து, கல்லைக் கொண்டு குத்தி, அதில் கிடைக்கும் அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஒருநாள் இவர்கள் கொண்டு வந்திருந்த நெல்லை குத்த கல் தேடிய போது, யானைத்தலை போல் இருந்த குழவிக்கல் ஒன்று தென்பட்டது. அந்தக் கல் நெல்குத்த உதவாது என நினைத்து, அதை நெல்லின் அருகிலேயே வைத்து விட்டு, வேறு கல் தேட சென்றனர். அவர்கள் வேறு கல் எடுத்து வருவதற்குள், குழவிக்கல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த நெல் குத்தப்பட்டு அரிசி, உமி, தவிடு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குவியலாக வைக்கப்பட்டிருந்தது. திரும்பி வந்த சிறுவர்கள் இதனைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு,””இது சாதாரணக்கல் இல்லை. நெல்குத்தி சாமி. நாம் தினம் தினம் கொண்டு வரும் நெல்லையெல்லாம் இது அரிசியாக்கிடும். இந்த கல்லை பத்திரப்படுத்த வேண்டும்,” என பேசிக் கொண்டே ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர்.

மறுநாள் நெல் குத்த அதிசயக் கல்லை வைத்த இடத்தில் பார்த்தபோது, அது அங்கு இல்லை. அப்போது, அருகில் இருந்த குளத்திற்குள் இருந்து நீர்க்குமிழிகள் கிளம்பின. அந்த இடத்தில் மூழ்கி பார்த்த போது, அவர்கள் தேடிய அந்த கல் கிடைத்தது. இந்த முறை இவரை தப்ப விடக்கூடாது. எப்படியாவது கட்டிப்போட வேண்டும் என சிறுவர்கள் தங்களுக்குள் முடிவு செய்து, ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

இந்த சமயத்தில் கிராம மக்கள் தங்கள் வயல்களில் நெற்கதிர் திருட்டுப்போவது பற்றி கிராம பெரியவரிடம் முறையிட்டார்கள். விசாரணையில், சிறுவர்கள் நெல் திருடியதும், நெல்குத்திக் கல் கிடைத்த விபரமும் தெரிய வந்தது. பெரியவர் அந்தக் கல்லை தன் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

அன்றிரவு பெரியவரின் கனவில் விநாயகப்பெருமான் தோன்றி, “”பெரியவரே! உன்னிடம் இருக்கும் கல் சாதாரணமானதல்ல. நானே கல் வடிவில் உள்ளேன். இதை வணங்கி வந்தால் சகல பாக்கியத்தையும் அடைவாய்,” என்றருளினார். அவர் வைணவர் என்பதால், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் விநாயகர் என்ற கருத்தைக் கொண்ட தன் தம்பியிடம் கல்லைக் கொடுத்து விட்டார். பின்னர் கோயில் கட்டப்பட்டது. பெரியவரும் கணபதியின் சக்தியை அறிந்து வழிபடத் துவங்கினார்

 

தலப்பெருமை

பொய்யாமொழிவிநாயகர்:

மிளகு வியாபாரி ஒருவர், இக்கோயிலில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது கோயில் பணியாளர்கள் நைவேத்தியத்திற்காக சிறிது மிளகு கேட்டனர். அதற்கு வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை. அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சந்தைக்கு சென்றதும் பணத்தை பெற்றுக்கொண்டு மிளகை கொட்டினார். ஆனால், உள்ளிருந்து உளுந்து கொட்டியது. அதிர்ந்த வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் உளுந்து மிளகாக மாறியது. அன்றிலிருந்து நெல்குத்தி சுவாமியின் பெயர் பொய்யாமொழி விநாயகர்என அழைக்கப்பட்டார்.

லிங்கத்தில் விநாயகர்:

இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம்.

விழுதில்லாத ஆலமரம்:

விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர்.
பிறர் பொருளை அபகரித்தவர்கள், ஏமாற்றுபவர்களை இங்கு அழைத்து வந்து விநாயகர் முன் சத்தியம் செய்ய கூறுவது இன்று வரை நடைமுறையில் உள்ளது

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இந்த மரத்திற்கு தினமும் பூசை செய்யப்படுகிறது.

திருவிழா விநாயகர் சதுர்த்தி

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *