அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்.

+91 – 4118 – 272 608 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

மூலவர் வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன் வண்டார்குழலி
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் முத்தி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவாலங்காடு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது இரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, “நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.

அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது எனத் தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின், என்னை வழிபட்டால் தான் முழுப் பலன் கிடைக்கும்என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து, அதன் மேல் அமைந்துள்ள கமலத்தேர்இங்கு தனிச் சிறப்பு.

முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்தபடியால் இத்தல இறைவன் வடஆரணயேஸ்வரர்என்றழைக்கப்படுகிறார். சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை. இறைவனால் அம்மையேஎன அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

தேவாரப்பதிகம்:

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

திருவிழா:

மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

நேர்த்திக்கடன்:

மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.

இருப்பிடம் :

திருவள்ளூரிலிருந்து (16 கி.மீ.) அரக்கோணம் செல்லும் வழியில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலிருந்து செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *