அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம்

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம், வேலூர் மாவட்டம்.

+91- 4177-246 427 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சலநாதீஸ்வரர்
அம்மன் கிரிராஜ கன்னிகாம்பாள்
தல விருட்சம் தக்கோலம்
தீர்த்தம் பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவூறல்
ஊர் தக்கோலம்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவகுருவாகிய வியாழனின் தம்பி உததி முனிவர். இவருக்கும் மனைவி மமதைக்கும் மகனாக தீர்க்கதர் தோன்றினார். ஒரு நாள் தீர்க்கதர் தன் ஆசிரமத்தின் அருகே தெய்வப்பசுவாகிய காமதேனு வரக்கண்டார். தாம் நடத்தும் வேள்விக்கு வந்தவர்களை உபசரிப்பதற்காக காமதேனுவை தம்முடன் இருக்குமாறு அவர் வேண்டினார். இந்திரன் கூறாமல் தங்க மாட்டேன் என காமதேனு மறுத்தது. முனிவர் அதை கட்டிப்போட முயன்றார். காமதேனு அவரை இழிந்த தொழில்களைச் செய்யும் நிலை ஏற்படும் என்று சபித்தது. முனிவரும் காமதேனுவை சாதாரணப்பசுவாக போகும்படி சபித்தார். உததி முனிவர் தன் மகன் இழிந்த செயல்கள் செய்வது கண்டு வருந்தினார்.

நாரதரின் அறிவுரைப்படி தன் மகனுக்காக இத்தலம் வந்து சிவனை வழிபட்டார். இறைவன் வெளிப்பட்டு,”இக்குறை தீர நந்தியை வழிபட்டு, அவர் வாயிலிருந்து தெய்வகங்கையை வரவழைத்து, அதன் மூலம் தமக்கு அபிஷேகம் செய்தால் பாவம் நீங்கும்எனக் கூறி மறைந்தார்.

சிவன் கூறியபடி செய்ய தீர்க்கதரின் சாபம் நீங்கியது. இதே போல் காமதேனுவும் இத்தல சிவன் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. சிவனின் கருணையால் காமதேனுவுக்கு பழைய உருவம் கிடைத்தது. முறையற்ற யாகம் செய்ததற்காக தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நினைத்து தக்கன் ஓலமிட்டதாலும், இத்தலத்தின் தலவிருட்சம் தக்கோலம் என்பதாலும் இத்தலத்திற்கு தக்கோலம்என பெயர் வந்ததாகக் கூறுவர்.

இத்தலத்தில் உள்ள நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் வழிந்து வந்ததாலும், இறைவனது திருவடியிலிருந்து நீர் சுரப்பதாலும் இத்தலத்திற்கு திருவூறல்என்ற பெயர் ஏற்பட்டது.

காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

கல்லாற்றின் கரையில் இரண்டு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரமும், கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதியும், வடக்கு நோக்கிய அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. கோபுரம் 1543ல் விஜயநகர அரசன் வீரப்பிரதாப சதாசிவ மகாராயர் கட்டியுள்ளார். மகாமண்டபத்தில் நடராஜர், ஐயப்பன், நவகிரக சன்னதிகள் உள்ளன. முதல் பிரகாரத்தில் பஞ்சலிங்கம், தெட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், திருமால், சூரியன், சந்திரன், சப்தமாதர்கள் உள்ளனர். இரண்டாம் பிரகாரத்தில் அம்மன், சக்தி விநாயகர் சன்னதி, குளம், நந்தி, பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது.

இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காகப் பெருகும் எனப் புராணம் கூறுகிறது. இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு பார்த்திருப்பதால் மிகவும் சக்தி உள்ளவளாக திகழ்கிறாள். இங்கு அம்மனுக்கு தான் முதல் பூஜை. இங்குள்ள சுவாமி, அம்மன், காளி, முருகன், தெட்சிணாமூர்த்தி ஒவ்வொன்றுமே மிகவும் சிறப்பு பெற்றது. நர்த்தன நிலையில்(உத்கடி ஆசனத்தில்) தெட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் வேறு எங்கும் காண முடியாதது. தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற தெட்சிணாமூர்த்தி கோயில்களில் இது முக்கியமானது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.

ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக இலிங்கத்தின்மேல் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் இலிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம். பார்வதிதேவி இந்த இலிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த இலிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். உத்தராயண காலத்தில் இந்த இலிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே இலிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும். இத்தலத்தில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு சிற்பக்கலைக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறது.

தேவாரப்பதிகம்:

ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டு அழகார் நன்றும் கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதும் இடம் வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்து அழகார் நம்மை ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாள் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, கந்தசஷ்டி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாமும் இங்கு வழிபாடு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.

விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் படைக்கின்றனர்.

வழிகாட்டி :

வேலூரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அவ்வப்போது உண்டு. அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் ரோட்டில் இறங்கி 4 கி.மீ. தூரம் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம். வேலூரிலிருந்தும் தக்கோலத்திற்கு நேரடி பஸ் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *