அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம்

அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2722 2084 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே நடைதிறந்திருக்கும். பிறநேரங்களில் சுவாமியை வெளியில் இருந்து தரிசிக்கலாம்.

மூலவர் கச்சி அனேகதங்காவதேஸ்வரர்
அம்மன் காமாட்சி
தீர்த்தம் தாணு தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு வல்லபைஎன பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை, இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், “விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும்என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்கச் செல்லுமுன்பு, இவ்விடத்தில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.

குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணிய பலனால், அருந்தமனின் மகனாகப் பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக சுக்கிரனை விழுங்கி, அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை.

விநாயகர் பிரதிஷ்டை செய்த இலிங்கம் என்பதால் சுவாமி, “அநேகதங்காவதேஸ்வரர்எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர்என்று பெயர் உண்டு.

இக்கோயில் மூலவர் சன்னதியுடன், ஒரே பிரகாரத்துடன் அமைந்த சிறிய கோயிலாக உள்ளது. ராஜகோபுரமும் கிடையாது. பிரதான வாயில் வடக்கு பகுதியில் இருக்கிறது. விநாயகர் பிரகாரத்தில், ஒரு தனிச்சன்னதியில் பெரிய மூர்த்தியாக இருக்கிறார். சுந்தரர் சிவனை, கச்சி அநேகதங்காவதமேஎன்று பதிகம் பாடியுள்ளார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், விநாயகர், வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு அருகம்புல் சாத்தி, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் திருமணம் நடக்கும் என நம்புகின்றனர்.

தேவாரப்பதிகம்:

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம்கதி ரோன்ஒளியால் விட்ட இடம்விடை யூர்தி இடங்குயில் பேடைதன் சேவலோடு ஆடுமிடம் மட்டுமயங்கி அவிழ்ந்த மலர்ஒரு மாதவியோடு மணம் புணரும் அட்ட புயங்கப் பிரானது இடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

இங்கு வேண்டிக்கொள்ள, பணி, பதவி உயர்வு கிடைக்கும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி :

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 2கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *