அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.

+91-4175 252 438 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அருணாச்சலேசுவரர், அண்ணாமலையார்
அம்மன் அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
தல விருட்சம் மகிழமரம்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம், சிவகங்கை
ஆகமம் காரண, காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவண்ணாமலை
ஊர் திருவண்ணாமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையைப் பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணையத் தவமிருந்தாள். அவளுக்குக் காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, உமையொருபாகனாகக் காட்சி கொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற, அவரோ “யார் எனது அடி, முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர்” என்று தெரிவித்து விட்டார். சோதிப் பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த சோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து, தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம், “நான் தங்களது முடியைக் கண்டேன்என்றார்.

பிரம்மன் பொய் சொன்னதை அறிந்து, “உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாதுஎன சாபமிட்டார். விஷ்ணு உண்மையைக் கூறியதால், தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார். பொய் சொன்ன தாழம்பூவை, தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல்தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தைப் பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல்வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.


ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் மாதப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.


கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், “கம்பத்திளையனார்என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.


இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார்என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி, திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த இலிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த இலிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், “பாதாள லிங்கம்இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். “கிளி கோபுரம்என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை அருணகிரி யோகேசர்என்கிறார்கள்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

கயிலாயத்தில் இலிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் இலிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம். கிருதா யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாகப் புவியியல்

வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு இலிங்கம் இருக்கும்.

1. இந்திரலிங்கம்

2. அக்னிலிங்கம்

3. எமலிங்கம்

4. நிருதிலிங்கம்

5. வருணலிங்கம்

6. வாயுலிங்கம்

7.குபேரலிங்கம்

8.ஈசானலிங்கம்

ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும். நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம். அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம். பேசிக்கொண்டு செல்லக்கூடாது. இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.

பிரதான நுழைவு வாயிலான இராசகோபுரம் வழியாக உள்ளே சென்றால் வலது பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபமும் இடது பக்கத்தில் கம்பத்திளையனார் சந்நிதியும் உள்ளது. இராசகோபுரத்தின் வடதிசையில் உள்ள வாயிலில் சித்திரமணி மண்டபம்உள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் ரமண மகரிஷி தமது இளம் வயதில் தியானம் இருந்த இடம் அமைந்துள்ளது. ஆனந்த நிஷ்டையில் அசையாது இருந்து தியானம் செய்த இடம் இதுவாகும். எதிரே உள்ள கம்பத்து இளையனார் திருக்கோவில் அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்து முருகபெருமான் அமர்ந்த இடமாகும். இச்சன்னதியின் தென்புறமாக நான்கு புறங்களிலும் திருமாளிகை பத்தி உடையதாய்ச் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. திருக்குளத்தின் வடமேற்கில் சர்வ சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இவரை வழிபட்டு கீழே இறங்கினால் பெரிய நந்தியைக் காணலாம். அதற்கு முன் உத்திராட்ச மண்டபம் உயரமாக காணப்படும். இதைகடந்து செல்லும்பொது இடதுபக்கம் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும் வலது பக்கம் முருகபெருமான் சந்நிதியும் உள்ளது. இன்னும் சற்று உள்ளே வலதுபக்கம் சென்றால் வன்னியமரத்து விநாயகர் திருக்கோயிலும் உள்ளது.

பெரிய நந்திகேசுரருக்கு நேராக வல்லாள மகாராசா கோபுரம் உள்ளது. அருணகிரிநாதப் பெருமான் இக்கோபுரத்தின் மீது ஏறி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள, கீழே விழுந்தபோது அவரை முருகப்பெருமான் தடுத்து ஆட்கொண்ட இடமாகும். இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து தலத்திற்கு சிறப்பு செய்துள்ளார் .

மூன்றாம் கோபுரம் கிளிகோபுரம் ஆகும். அருனகிரிநாதர் பூத உடலை விட்டு கிளியாக மாறி பாரிசாத மலர் கொண்டு வரச்சென்றார். திரும்பி வரும்போது தன் உடல் இல்லாததுகண்டு கிளி உருவிலே கந்தர் அனுபூதிபாடிய இடம் இக்கோபுரம் ஆகும். இன்றும் இக்கோபுரத்தில் நிறைய கிளிகள் வாழ்வதைக் காணலாம்.

கிளிகோபுர வாயிலை கடந்து சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதற்கு தீபதரிசன மண்டபம் எனப்பெயர். இங்கு, திருக்கார்த்திகை நாளில் பஞ்ச மூர்த்திகள் நிற்க மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும். இம்மண்டபம் மங்கையர்க்கரசி என்ற சிவனடியார் கட்டியது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் தல விருட்சமான மகிழமரமும், பின்புறம் அருணகிரி யோகீஷ்வர் சந்நிதியும், வடக்கே அருள்மிகு அம்பாள் சந்நிதியும், நேர் எதிரே காளத்தீஸ்வரர் சந்நிதியும், அருகில் யாக சாலையும் அமைந்துள்ளது. கொடிமரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் வடக்கே சுப்பிரமணிய சுவாமி, தெற்கே விநாயகப் பெருமானும் உள்ளனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரம் அமைந்துள்ளது. இப்பிரகாரத்தில் சிவாலயத்தில் அமைய வேண்டிய அனைத்து பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன.

நந்தியை வழிபட்டு அண்ணாமலையார் சந்நிதிக்கு செல்லுமுன் பிரதோஷ நந்தி உள்ளது. துவார பாலகர்களை தரிசித்து, கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தில் நின்று தரிசிக்கும் போது அருணாசலேசுவரர் அருளே திருமேனியாக சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள இலிங்கோத்பவர் தோன்றிய தலம். 9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை.

கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று கிரிவலம் சுற்றுவது சிறப்பு. முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று, நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார். இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும். அன்றும் கிரிவலம் வரலாம்.

ஞாயிறு அன்று மலை வலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும்.

திங்கள் அன்று மலை வலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய் அன்று மலை வலம் வந்தால் கடன் வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம்.

புதன் அன்று மலை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம்.

வியாழன் அன்று மலை வலம் வந்தால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.

வெள்ளி அன்று மலை வலம் வந்தால் விஷ்ணு பதம் அடையலாம்.

சனி அன்று மலை வலம் வந்தால் நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும்.

அம்மாவாசை அன்று மலை வலம் வந்தால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும்.

48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

தேவாரப்பதிகம்:

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.

திருவிழா:

கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம். கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா.

மாசி மகா சிவராத்திரி.

தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம், சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம்.

மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா. அம்மன் சந்நிதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை. தினசரி 6 கால பூஜை.

மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா)

தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார்.

தை மாதம் இரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார்.

பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் – 6 நாட்கள்.

வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்த வண்ணம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்.

பிரார்த்தனை:

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர், வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மனை அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம், பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாகத் தரப்படுகின்றன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய புத்தாடை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்குப் படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *