அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

+91 – 94427 86709 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் அக்னி, கன்வ தீர்த்தம்
பழமை 1200 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்
ஊர் கிளியனூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞான சம்பந்தர்

இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். கிள்ளி என்பது பழங்காலச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர்என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர்என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர்என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில், இடைக்காலத்துச் சோழமன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். இராகு, கேது என்ற கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர்.

காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது.

சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார்.

மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. (ஆதாரம் : இம்மன்னனுடைய 10 –ம் ஆண்டு கல்வெட்டு) இவ்வூர் ஒய்மா நாட்டுப் பிரம்மதேயமான கிளிஞனூர்எனவும், இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திரு அக்ஞீசரம் உடையவர்எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது.

கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் உள்ள கல்வெட்டு கூறும் செய்திகள்:

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால்: பிச்சாண்டவர் பூஜைக்கு மான்யம் வழங்கப்பட்டுள்ளது. நந்தா விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம் தரப்பட்டுள்ளது. கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் தரப்பட்டுள்ளது.

1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது இக்கோயில். இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர்எனப்படுகிறார்.

இத்தலத்து இறைவனின் பெருமை:

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள், தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே, தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமே, நன்மை உற்ற கிளியன்னவூரனே மிகக்கடினமான வறுமை, இயல்பற்றவர்களின் தொடர்பு, மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர்.

கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி, அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர். இத்தலத் தேவாரப் பதிகத்தை ஓதுபவர்கள் இவ்வுலகக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஒரு குறையும் இல்லாது நல்வாழ்வு வாழ்வர்.

தேவாரப்பதிகம்:

தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை ஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே!

திருஞானசம்பந்தர்

இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 276வது தலமாக கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

திருவிழா:

மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *