அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்

அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146-223 379, 98430 66252

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அபிராமேஸ்வரர்
அம்மன் முத்தாம்பிகை
தல விருட்சம் வன்னி, கொன்றை
தீர்த்தம் ஆம்பலம் பூம்பொய்கை(குளம்), தண்ட தீர்த்தம்(கிணறு), பம்பை(ஆறு)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோமாதுபுரம், திருஆமத்தூர்
ஊர் திருவாமத்தூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் பசுக்களை கொடிய விலங்குகள் கொடுமைப்படுத்தி வந்தன. வருத்தமடைந்த பசுக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவனை வேண்டிக் கொம்புகளை பெற்ற தலம் தான் திரு++மத்தூர்.

இத்தலத்தை பசுக்களின் தாய் ஊர் என்பார்கள். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே வந்து இங்குள்ள இறைவனைப் பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது. இத்தல இறைவன் அபிராமேஸ்வரர் பசுவின் கால் குளம்பை தன் தலையில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார்.

இராவணனை வதம் செய்த இராமன் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார்.

சூரபத்மனை அழிப்பதற்காக முருகன், இங்குள்ள சிவனையும் பார்வதியையும் வணங்கியுள்ளார். பார்வதி தனது சக்தி வேலை முருகனுக்கு கொடுத்து, போருக்கு அனுப்பி வைத்தார்.

இத்தல இறைவனை விநாயகர், முருகன், பார்வதி, இராமர், சீதை, லட்சுமணன், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியின் சாபத்தால் வன்னி மரமாக மாறிவிட்டார். அவரே இத்தலத்தின் தல விருட்சமாக சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே அருள்பாலிக்கிறார்.

அம்மன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கோயில் உள் பிரகாரத்தில் மால்துயர் தீர்த்த விநாயகர், முருகன், நடராஜர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர், சகஸ்ரலிங்கம், சட்டநாதர், காசிவிஸ்வநாதர், அருணாச்சலேஸ்வரர், ராமர், சப்தமாதர், நால்வர், 63 நாயன்மார், சண்டேஸ்வரர், பைரவர், நவகிரக சன்னதிகள் உள்ளன. தென் மேற்கு மூலையில் வட்டப்பலகை என்னும் சத்திய மண்டபம் உள்ளது.

கோபுர வாயிலைக்கடந்து உள்ளே நுழைந்தவுடன் சுதையால் ஆன பெரிய நந்தியும், பாதாள நந்தியும், கொடிமரமும், பலி பீடமும் காட்சிதருகின்றன. கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.

இங்கு மூலவர் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இங்குள்ள முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும், எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர். அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்மனும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். திருவட்டப்பபாறை என்ற சிவலிங்க மூர்த்தி இங்கு மிகவும் சிறப்பு பெற்றது. இதன் முன் அமர்ந்து இராமனும், சுக்ரீவனும் இராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக வரலாறு.

தேவாரப்பதிகம்:

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீயாடி யாமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 21வது தலம்.

திருவிழா: சிவராத்திரி, நவராத்திரி.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள முத்தாம்பிகையை பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து படைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *