கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்

அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)
அம்மன் மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)
தல விருட்சம் மூங்கில் மரம்
தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்
ஊர் வெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி, சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறைப் பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுறை (அருள் துறை) எனப்பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர்எனப்பெயர் பெற்றார்.

மறைகள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில், இறைவன் தீயுருவாகத் தோன்றினான். அவை கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினான்.

திருமண நாளன்று திருநாவலூரில் திருமணக்கோலத்திலிருந்த சுந்தரரை வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட்கொண்டார். “நீ எனக்கு அடிமைஎன்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட, அதிலுள்ள கையெழுத்து உண்மையானதுதான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை, “பித்தன் கிறுக்கன்என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன்தான் என்பதை அறிந்த சுந்தரர் ஈசனை வணங்கி நிற்க, “என்னப் பற்றி பாடுஎன்று ஈசுவரன் கேட்க, “எப்படிப் பாடுவதுஎன்று சுந்தரர் கேட்க, “என்னைப் பித்தா என்று திட்டினாயே! அதையே பாடுஎன்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானேஎன்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார்.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது. பரமன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் பரமன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு. அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜயலிங்கம் உள்ளது. தேவேந்திரன் பூஜித்த சுந்தரலிங்கம் இங்கு உள்ளது. மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது.

இங்குள்ள சண்முகநாதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம்.

மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நீங்க, அம்மை நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகைசந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி , ஸ்ரீசக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு.

பாண்டவரில் அர்ச்சுனன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்தபோது, அவர்களைக்கண்ட பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான்.

கருவுற்ற பசுவை வேள்வி செய்த பாவத்தை, விதகோத்திரர் என்னும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி, பாடிப்பணிந்து போக்கிக் கொண்டார். சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார் என்ற சிறப்பும் முக்கியமானது.

இத்திருக்கோயில் திருவருட்டுறை என்ற பெயருடையது. கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற மேனியாக காட்சி தருகிறாள். இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார்.

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன், இலிங்கத்தில் ஐக்கியமாகும் முன், கருவறைக்கு முன்பாகக் கழற்றி வைத்த காலணி, பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது.

தேவாரப்பதிகம்:

பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள் அத்தாஉனக்கு ஆளாய்இனி அல்லேன் எனலாமே.

சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.

திருவிழா:

ஆடி சுவாதி சுந்தரருக்கு 2 நாட்கள்.

பங்குனி உத்திரம் கொடி தேரோட்டம் 10 நாட்கள். ஆருத்ரா தரிசனம், ஆவணி மூலம் புட்டு உற்சவம், கந்த சஷ்டி ஆகியவையும் சிறப்பாக நடக்கும்.

பிரார்த்தனை:

இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும்.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையாரை வழிபட்டால் பேச்சு வரும் அம்பிகை சந்நிதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றனால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும்.

நேர்த்திக்கடன்:

தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம், தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து, பால் அபிசேகம் செய்து, ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய புத்தாடை சாத்தலாம். நெய்தீபம் ஏற்றலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *