வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை மாவட்டம்.

+91-4322-221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வியாக்ரபுரீஸ்வரர்
அம்மன் பார்வதி தேவி
தல விருட்சம் வன்னி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேங்கைபதி
ஊர் திருவேங்கைவாசல்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இந்திர சபைக்கு,ஒருமுறை காமதேனு தாமதமாக சென்றது. கோபமடைந்த இந்திரன், பூலோகத்தில் சாதாரணப்பசுவாக பிறந்து திரிவாய்என சாபமிட்டான். வருத்தமடைந்த காமதேனு பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரிடம் சாப விமோசனத்திற்கு ஆலோசனை கேட்டது. அதற்கு அவர், “இங்கு சுயம்புமூர்த்தியாக உள்ள சிவபெருமானுக்கு உனது இரு காதுகளில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உன் சாபம் நீங்கும்என்றார்.

பசுவும் முனிவரின் உபதேசப்படி தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டது. ஒருநாள் சிவன் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார். பசு அபிஷேகத்திற்கு வரும் போது புலி வடிவெடுத்த சிவன்,”உன்னை கொன்று பசியாறப்போகிறேன்என்றார். அதற்கு பசு,”நான் சிவ பூஜைக்காக சென்று கொண்டிருக்கிறேன். பூஜையை முடித்து விட்டு நானே உன்னை தேடி வருகிறேன். அதன் பின் நீ என்னை கொன்று உன் பசியாறலாம்என்றது.

இதைக்கேட்ட புலி வழிவிட்டது. பசுவும் சிவபூஜையை முடித்து விட்டு நேராக புலியிடம் வந்து, “இப்போது நீ என்னை சாப்பிடலாம்என்றது. புலி வடிவிலிருந்த சிவன், பசு மீது பாய்வது போல் சென்று, ரிஷப வாகனத்தின் மீது உமாதேவியருடன் காட்சி கொடுத்து, சாப விமோசனமும் தந்தார். அத்துடன் வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு பசு, “இறைவா. நீங்கள் எனக்கு அருள்பாலித்தது போல் இங்கு வந்து தங்களை வழிபாடு செய்பவர்களின் குறையை போக்க வேண்டும். அத்துடன் புலி வடிவில் வந்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும்என வேண்டியது. “வியாக்ரம்என்றால் புலிஎனப் பொருள்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது, ஒரு காலை மடித்து மறு காலை நீட்டி அமர்ந்து, தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும்.

எங்குமில்லாத சிறப்பாக சிவனின் கருவறைக்கு எதிரில் அவர் பார்வை படும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார். இங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் கருவறையின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள்.

மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.

இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.

வழிபாட்டு முறைகளில் அகவழிபாடு, புறவழிபாடு ஆகியவை பின்பற்றப்படுகின்றன. முதலில் மூலவரை வழிபட்டு பின் பரிவார தெய்வங்களை வணங்குவது அக வழிபாடாகும். மற்ற தெய்வங்களை வழிபட்ட பிறகு மூலவர் சன்னதி வருவது புற வழிபாடாகும். இங்கு புறவழிபாடு முறையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக கருவறையில் அருள்பாலிக்கும் வியாக்ரபுரீஸ்வரரை வழிபாடு செய்யும் விதமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *