விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை)

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை), திண்டுக்கல் மாவட்டம்.

+91 4543 227 572, 97865 61935

காலை 6.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் உத்தரவாகினி
ஆகமம் காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குன்று அரண் கோட்டை
ஊர் கண்ணாபட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன்பின், தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் சிவனடியார் எவரும் அவர் கண்ணில் படவில்லை. தன் பணியாளரை அனுப்பி, ஊருக்குள் யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். வைகை நதியில் சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் சொன்னார். அவர் சென்று அழைத்தார். “நானும் சிவ தரிசனம் செய்தபின்தான் சாப்பிடுவது வழக்கம்என்றவர், தன்னை ஒரு சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினார். அப்போதுதான்,”அங்கு சிவாலயம் எதுவுமில்லைஎன்ற உண்மை சிவபக்தருக்கு உரைத்தது. இதைக்கேட்டு கோபம் கொண்ட அடியவர், சிவனுக்கு கோயில் இல்லா ஊரில் உபசரிப்பைக்கூட ஏற்றுக் கொள்ளமாட்டேன் எனச் சொல்லி சென்று விட்டார். இதனால், வருந்திய பக்தர் உடனே காசி சென்று ஒரு இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இவருக்கு விஸ்வநாதர்என்ற பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.

விசாலாட்சி அம்பாள் பிரசித்தி பெற்றதால், இப்பகுதியில் விசாலாட்சி கோயில் என்றால்தான் தெரியும். பிரதான வாசலும் இவளது சன்னதி எதிரே அமைந்துள்ளது. ஜாதக தோஷம் அல்லது நாகதோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், இவளுக்கு சிவப்பு ஆடை அணிவித்து வழிபடுகின்றனர். அப்போது, அம்பாளுக்கு பூஜித்த மாலையைப் பிரசாதமாகத் தருவர். அதை எடுத்துச் சென்று, வீட்டில் வைத்து வழிபட்டு வர விரைவில் தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. வில்வ மரத்தடியில் அஷ்ட நாகர்களுடன் உள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றியும் வணங்குகின்றனர். இராகு, கேது தோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் வணங்குவதுண்டு.

ஒருசமயம் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றில் அடித்து வரப்பட்ட நந்தியும், வலம்புரி சங்கும் கரையில் ஒதுங்கியது. இந்த நந்தியை சுவாமி சன்னதி முன், பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், வலம்புரி சங்கில் தீர்த்தம் எடுத்து விஸ்வநாதருக்கு பூஜை செய்கின்றனர். வைகையில் கிடைத்த சங்கரலிங்கம் சன்னதி பிரகாரத்தில் உள்ளது. சந்திரன், விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவக்கிரகம், காலபைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி தனிச்சன்னதி அமைப்பில் காட்சி தருகிறார்.

சமஸ்கிருத மொழிக்கு முதன்முதலாக தமிழில் அகராதி வெளியிட்ட அரங்க கிருஷ்ண சாஸ்திரிகளும் இவ்வூரில் பிறந்தவரே ஆவார்.

கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை உத்தரவாகினிஎன்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.

திருவிழா:

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம்.

கோரிக்கைகள்:

மரண பயம் நீங்க, பாவம் நீங்கி, முக்தி கிடைக்க இங்குள்ள வைகை நதியில் நீராடுகின்றனர். நோயால் அவதிப்படுவோர் குணமாகவும், ஜாதக தோஷம் அல்லது நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள விசாலாட்சி அம்மனை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுவோர் குணமாகவும் இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றியும், விசாலாட்சிக்கு இனிப்பு பாயசம், சர்க்கரைப்பொங்கல் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *