வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை

அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை, கோவை மாவட்டம்.

+91- 0422 – 2396821

காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் வில்லீஸ்வரர், வில்லீஸ்வர பரமுடையார்
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இருகரை
ஊர் இடிகரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகாற்சோழமன்னன் தனது நாடு சிறக்கவும், தனக்கு ஏற்பட்ட புத்திரதோசம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் ஆலோசனையின் படி, கொங்குநாட்டில் காடு திருத்தி, குளங்கள் வெட்டி 36 சிவ ஆலயங்களை கட்டினான். அவ்வாறு கோயில்கள் கட்டியபோது 29 வது கோயிலை, வில்வமரங்கள் நிறைந்து, வனமாக இருந்த இவ்விடத்தில் எழுப்பிட எண்ணினான். எனவே, இவ்விடத்தில் கோயிலை அமைக்க வில்வமரங்களை வெட்டி காடுகளைத் திருத்தினான். அப்போது அங்கு காவல் தெய்வமாக இருந்த துர்க்கை பத்திரகாளியம்மன், தனக்கு பலி கொடுத்து விட்டு, பின் ஆலயம் எழுப்பும்படி கூறினாள். அதற்கு ஒப்புக்கொண்ட மன்னர் சிவாலயம் கட்டி முடித்த பின் துர்க்கைக்கு தனியே கோவில் ஒன்றை எழுப்புவதாக கூறி, மீண்டும் காடுகளைச் சீரமைத்தான். அப்போது, அவ்விடத்தில் மண்ணில் இருந்து சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதனையே இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்த மன்னன் சிவனுக்கு கோயிலை எழுப்பி வழிபட்டார். அதன்பின், ஊருக்கு எல்லையில் வில்லிதுர்க்கை பத்திரகாளிக்கு கோழி, ஆடு, பன்றி என முப்பலி கொடுத்துவிட்டு, தனியே மற்றோர் கோயிலையும் எழுப்பினார்.

இராமர் தனது வனவாசத்தின் போது இங்கு வந்து சிவபெருமானிடம் வில் வாங்கிச் சென்றுள்ளார். இதனால், இத்தலத்தில் அருள்புரியும் சிவனுக்கு வில்லீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும், வில்வவனத்தில் இருந்து கிடைத்த சிவலிங்கம் என்பதாலும், வில்லை ஆயுதமாகக் கொண்ட வேட்டை சமுதாய மக்களால் வணங்கப்பட்ட சிவன் என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இராமர் இத்தலத்திற்கு வந்ததன் அடையாளமாக இத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகேயுள்ள கோவிந்தநாயக்கன்பாளையத்தில் கோதண்டராமர் கோயில் தற்போதும் அமைந்துள்ளது.

இங்குள்ள மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார். அவருக்கு நேரே, ஆவணியில் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார். கோவில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதற்கு சான்றாக கல்மண்டபம் போல காட்சிதருகிறது.

இந்த ஆலயமும், அருகே உள்ள கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் மற்றும் வடமதுரை விருந்தீஸ்வரர் ஆலயங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று ஆலயங்களின் இடையே ஆதியில் சுரங்கப்பாதையும் இருந்துள்ளது. போர் நடக்கும் காலங்களில், இம்மூன்று ஆலயங்களுக்கும் இடையே உள்ள சுரங்கப்பாதை வழியாக மன்னர் சென்று சிவனை வழிபட்டாராம். இத்தல விநாயகர் சாந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


இத்தலம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அரணாக அமைந்துள்ள குருடி மலை, பாலமலை, பொன்னூத்து மலை ஆகிய மலைகளில் பெய்யும் மழைநீர் வழிந்தோடி வரும் இரண்டு ஓடைகளின் கரைகளுக்கு நடுவே இவ்வூர் அமைந்துள்ளது. இதனால் இவ்வூர் ஆதியில் இருகரைஎன்றழைக்கப்பட்டு அதுவே மருவி நாளடைவில் இடிகரைஎன்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள வில்லீஸ்வரருக்கு இடப்புறம் முகப்பில் மிகச்சிறிய நந்தியுடன் வேதநாயகி அம்பாள், பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனிச்சன்னதியிலும், கோயில் சுற்றில் விழுதுகள் இல்லாத கல்ஆல மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் அருள்புரிகின்றனர். இங்குள்ள நவக்கிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. இங்கு காகிதத்தில் குறைகளை எழுதி வைக்க அக்குறை முப்பது நாட்களில் குணமாகும் அதிசயம் நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் புராதனமான இங்கு, இதுவரையிலும் அதிகளவில் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவிழா:

சித்திரைப்பிறப்பு,ஆடி வெள்ளி, தை வெள்ளி, கந்தசஷ்டி, ஆருத்ராதரிசனம், மகாசிவராத்திரி, பங்குனியில் சோமவாரம், திருவாதிரை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, திருக்கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கோரிக்கைகள்:

வில்லீஸ்வரரை வேண்டிக்கொள்ள திருமணத்தடை நீங்கும், புத்திரதோசம் நீங்கும், நோய்கள் தீரும், சகலசெல்வங்களும் பெருகும், துன்பங்கள் நீங்கும், குறைகள் நிவர்த்தியாகும், வழக்குகளில் வெற்றி உண்டாகும் என நம்பப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி, பன்னீர், இளநீர், விபூதி, சந்தனத்தால் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகிறது. தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை அபிசேகம் செய்தல், அன்னதானம் செய்தல் என நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *