வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி.

+91-413-233 6686

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீசுவரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வேதபுரிபுதுச்சேரி
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

புதுவையின் கடற்கரையில் இருந்து மேற்கே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பெரிய பிராமணர் வீதி, சிறிய பிராமணர் வீதி, காந்தி வீதி, மாதா கோயில் வீதி இவற்றிற்கிடையே சுமார் 238 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் சிறப்புடன் விளங்கியது.

இத்திருக்கோயில் விபவ ஆண்டு ஆவணி மாதம் 20ம் தேதியன்று (1748)ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதென்று ஆனந்த ரங்கர் நாள்குறிப்பில் இருந்து அறிய முடிகிறது. இப்படி பாழாகிப்போன இத்திருக்கோயில் கி.பி. 1788 ல் (இன்று காந்தி வீதியில் உள்ளது) மீண்டும் திவான் கந்தப்ப முதலியாரின் பெருமுயற்சியாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் கட்டப்பட்டது.

வன்முறையில் இடிக்கப்பட்ட வேதபுரீசுவரர் திருக்கோயில் துய்ப்ளேக்ஸ் ரங்கப்பிள்ளை காலத்தில் புதிதாய் உருவாகாமலேயே போயிற்று. இதன் புதிய பரிமாணம் இன்று காந்தி வீதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் முகப்பில் 75 அடி உயரமான இராசகோபுரம் பீடுடன் தோன்றுகிறது.

இத்தலத்தில் அழகுவிநாயகர் வீற்றிருக்கிறார். விஷ்ணு துர்க்கை இருப்பதும் சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தலத்தில் இருக்கும் பைரவருக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. விபூதி அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.

இவரை வழிபட்டால் வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம், எதிரிகள் தொல்லைகளிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவிர கோயிலில் உள்ள அறுபத்து மூவருக்கு அந்தந்த நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்து சுவாமி புறப்பாடு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் தங்கள் பிறந்த நாளின் போது தாங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போல் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

இந்த தலத்தின் முருகப்பெருமானை இராமலிங்க சுவாமி பாடியுள்ளார். கருவறையின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் தனிக்கோயிலாக அமைந்துள்ளது. 18 ம் நூற்றாண்டுக் கோயில் இது.

திருவிழா:

வைகாசி பிரம்மோற்ஸவம் – 18 நாட்கள். நவராத்திரி புரட்டாசி -10 நாட்கள்.              ஐப்பசி அன்னாபிஷேகம்.                        மாசி சிவராத்திரி.

கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, ஆடிக் கிருத்திகை,தை கிருத்திகை, சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம் ஆகிய தினங்களில் கோயிலில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் மாதத்தின் பிரதோஷ தினங்களில் கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவது சிறப்பு.

கோரிக்கைகள்:

எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இத்தலத்து பெருமானை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. இத்தலத்துக்கு வந்து மனமுருகி வணங்கிவிட்டுச் சென்றால் மனநிம்மதி கிடைக்கிறது என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு புத்தாடை சாத்துதல், பால் பன்னீர், இளநீர், தயிர் , நல்லெண்ணெய் சந்தனம், விபூதி, அபிஷேகப்பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடன்களாக செய்கிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதல், விளக்கு வைத்தல், ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *