தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை.

+91- 44 – 2226 4337, 98419 41819

வீரபத்திரர் (செல்லியம்மன்) சன்னதி காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், தண்டீஸ்வரர் சன்னதி காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு – 8.30 மணி திறந்திருக்கும்.

மூலவர் தண்டீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் கருணாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் எமதீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேதஸ்ரேணி
ஊர் வேளச்சேரிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டித் தவமிருந்தன. அவற்றிற்கு காட்சி தந்த சிவன், தோஷம் நீக்கி அருளினார். வேதங்கள் வழிபட்டதால் வேதச்சேரிஎன்றழைக்கப்பட்ட தலம் பிற்காலத்தில், “வேளச்சேரிஎன்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயர்.

வீரபத்திரருக்கு தண்டாயுதம் என்ற உலக்கை போன்ற ஆயுதமே தரப்பட்டிருப்பது மரபு. இவரை நின்ற கோலத்திலேயே பார்க்க முடியும். ஆனால், சிவாம்சமான வீரபத்திரர், கைகளில் மான், மழு தாங்கி, அமர்ந்த கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம். இவர் கன்னிப்பெண்களைக் காக்கும் தெய்வமாக அருளுகிறார். அசுரன் ஒருவனை அழிக்கச்சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். தங்களை அழிக்க ஏழு கன்னிகள் புறப்பட்டிருக்கும் செய்தியை அந்த அசுரனும் அறிந்து கொண்டான். முனிவரைக் கொன்ற தோஷம் ஒருபுறம், அசுரனின் மிரட்டல் மறுபுறமுமாக இருந்த வேளையில், சிவபெருமான், அவர்களைக் காக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார். வீரபத்திரர் கன்னியர்களைக் காத்ததோடு, அசுரனையும் அழித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சப்த கன்னியர் அருகில் வீரபத்திரர் காவல் தெய்வமாக இருக்கிறார். வீரபத்திரர், வலது காலை மடக்கி அமர்ந்திருக்கிறார். கைகளில் தண்டத்திற்கு பதிலாக உருத்ராட்ச மாலை மற்றும் மழு (கோடரி போன்ற ஆயுதம்) ஏந்தியிருக்கிறார். பீடத்தில் நந்தி இருக்கிறது. பவுர்ணமியில் இவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடக்கிறது. கன்னியரைக் காத்த கடவுள் என்பதால், பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி வேண்டிக்கொள்கிறார்கள். சப்தகன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை, செல்லியம்மனாகப் பாவித்து வழிபடுகிறார்கள். சப்தகன்னியர் சன்னதியை, “செல்லியம்மன் சன்னதிஎன்றே அழைக்கின்றனர். வீரபத்திரர் எதிரே விநாயகர் இருக்கிறார்.

தண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி, தலையை பணிவாகக் கீழே சாய்த்திருப்பது விசேஷமான அமைப்பு. அம்பாள் கருணாம்பிகை சன்னதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சூரிய ஒளி தை முதல் தேதியில், சிவலிங்கம் மீது விழுகிறது. வேதங்களின் தோஷம் போக்கிய சிவன், இங்கிருப்பதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி யோக தெட்சிணாமூர்த்திஎனப்படுகிறார். இவரது பீடத்தில் நந்தி இருக்கிறது.

அற்ப ஆயுள் பெற்றிருந்த, தன் பக்தனான மார்க்கண்டேயரின் ஆயுளை எடுக்கச் சென்ற எமனை சிவபெருமான் எட்டி உதைத்தார். அவனது பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டான். அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து, பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், “தண்டீஸ்வரர்என்று பெயர் பெற்றார். இழந்த பதவி திரும்பக் கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சுவாமி சன்னதி கோஷ்டத்தில் துர்க்கையும், பிரகாரத்தில் லட்சுமி, சரஸ்வதியும் உள்ளனர். ஒரே இடத்தில் நின்று மூன்று தேவியரையும் தரிசிக்கலாம். பிரகாரத்தில் உள்ள விநாயகர், வேத விநாயகர் என்றழைக் கப்படுகிறார். இவர் கைகளில் வேதங்களுடன் காட்சி தருகிறார். எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலம் என்பதால், இங்கு அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.

திருவிழா:

சித்ராபவுர்ணமி, ஆடி ஞாயிறு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.

கோரிக்கைகள்:

ஆயுள் விருத்தி பெற, இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். கன்னிப்பெண்கள், சப்தகன்னியரையும், வீரபத்திரரையும் வணங்கிச் செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும், வீரபத்திரருக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *