வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி
அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634-283 058
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வன்னியப்பர் | |
அம்மன் | – | சிவகாமிசுந்தரி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஆழ்வார்குறிச்சி | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இவ்வுலகத்தில் ஆக்கல், அழித்தல் ஆகிய இரு தொழில்களையும் அக்னியே செய்கிறது. யாகங்களிலும், நைவேத்தியம் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படும் அக்னி, மனிதன் இறந்து போனால் அவனது உடலை எரிக்கவும் பயன்படுகிறது. அவனது ஆத்மாவை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது. ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை ஒளியிழந்து போகுமாறு அந்த ரிஷிகள் சபித்தனர். தனது கடமையை சரிவரச் செய்யாமல், சாபத்திற்கு ஆளான அக்னி பகவான், மீண்டும் தனது பழைய நிலையை பெற சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். பூலோகத்தில், ஒரு நதியின் கரையில் அவர் இந்த பூஜையை செய்து வந்தார். சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து மீண்டும் ஒளி தந்தார்.
சீதாதேவியின் கற்பை நிரூபிக்க, தான் உதவியதால், தான் தவமிருந்த இடத்தில் ஓடிய நதிக்கு அவளது கணவரான இராமனின் பெயரை வைத்தார். அது “இராமநதி” எனப்பெயர் பெற்றது.
காசியில் பஞ்ச குரோச தலங்களில் யார் வசிக்கிறார்களோ அவர்களுக்கு பாவம் செய்யும் எண்ணமே தோன்றுவதில்லையாம். அது போல இந்தக் கோயிலைச் சுற்றியும் பஞ்சகுரோச தலங்கள் உள்ளன.
பாப்பான்குளம் இராமேஸ்வரர், பாபநாசம் பாபநாச நாதர், திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வர நாதர், சிவசைலம் சிவசைலப்பர் ஆகியவற்றுடன் ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில் ஆகியவையே அத்தலங்கள். இவை கோயிலைச் சுற்றி 25 கி.மீ., தூரத்துக்குள் உள்ளன. எல்லா தலங்களுக்கும் இங்கிருந்து பஸ் வசதி உண்டு.
மற்ற கோயில்களைப்போல இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால் சுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் நவக்கிரக யந்திரம் புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இது ஒரு அபூர்வ அமைப்பாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் நீலகண்ட விநாயகர் முன்புள்ள மண்டபத்தில் இதுபோன்ற அமைப்பு உண்டு. ஆனால் சிவனின் முன்னிலையில் நவக்கிரக யந்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது இங்கு மட்டுமே.
பிற கிரகங்களுடன் பாம்பு வடிவில் இராகு, கேது உள்ளன. இந்த கிரகங்களை பாம்பாட்டிகள் போன்ற உருவில் உள்ளவர்கள், ஆட்டி வைப்பது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தின் நீர், தீர்த்தத்திற்குள் உள்ள சிவலிங்க மண்டபத்தை மூழ்கடித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். சாஸ்தா சன்னதியில் சாஸ்தா பலிபீட வடிவில் இருக்க, அருகில் பூர்ண, புஷ்கலா அருளுகின்றனர்.
கரூவூர் சித்தர் ஒரு தூணில் நாயுடன் காட்சி தருகிறார். சித்தர் வழிபாடு செய்பவர்களுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற அமைதியான சூழலில் கோயில் இருக்கிறது.
நவக்கிரகங்களை மண்டபங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவசன்னதி முன்புள்ள மண்டபக் கூரையில் யந்திர வடிவில் நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.
கோரிக்கைகள்: இக்கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள மண்டபத் தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை காட்சி தருகிறாள்.
அவளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குழந்தை இல்லாத பெண்களும் இவளை வழிபடுகின்றனர். அம்பாள் சிவகாமிசுந்தரியை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply