வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146- 231 159, +91-94432 93061

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வாலீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோலியனூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். “சப்தகன்னியர்எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.

இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், பூலோகத்தில் இத்தலத்தில் தன்னை வழிபட்டு வர, குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாக கூறினார். மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக, தனது அம்சமான வீரபத்திரரையும் அனுப்பி வைத்தார்.

சிவன் அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, “கன்னியர் குருஎன்று அழைக்கிறார்கள் .

சிவாலயமான இங்கு பெரியநாயகி அம்பாளுடன் சிவன் காட்சி தருகிறார்.

வாலி தன் தம்பி மனைவியை அபகரித்த தோஷம் நீங்க வழிபட்டதால், சுவாமிக்கு,”வாலீஸ்வரர்என்று பெயர் ஏற்பட்டது. வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.

பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள்.
ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள்.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராகியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில்
இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

பிரகாரத்தில் முருகன், விநாயகர், சனீஸ்வரர், லட்சுமி நாராயணர் ஆகியோரும் இருக்கின்றனர்.

இத்தலத்து மூலவர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார். சனி பகவான் இங்கு தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

மகா சிவராத்திரி, பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

கோரிக்கைகள்:

தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத நோய்கள் விரைவில் குணமாகவும், முக்தி கிடைக்கவும் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். சனி தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *