திரு மணிச்சேறை உடையார் கோயில், இஞ்சிமேடு, பெரணமநல்லூர்

அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயில்இஞ்சிமேடு, பெரணமநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மணிச்சேறை உடையார்
தீர்த்தம் சுனை தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இஞ்சிமேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

இமயமலைக்கு நிகராக பெரியமலைஎன்று ஒரு மலை இருந்தது. சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்த போது, சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அவர் தென்பகுதிக்கு வரும் போது இஞ்சிமேட்டில் வான் நோக்கி உயர்ந்திருந்த பெரியமலையின் மீது ஏறி நின்றார். அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்று முதல் பெரிய மலை தென் கயிலாயம்என அழைக்கப்படுகிறது. தரை மட்டமான அந்த பகுதியில், ஒரு முனிவர் நவபாஷாணத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்.

இவரது பக்தியை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு யானையை அனுப்பினார். முனிவர் தியானத்தில் இருந்த போது, அந்த யானை அருகிலிருந்த குளத்திலிருந்து நீரை எடுத்து முனிவரின் மேல் தெளித்து விளையாடியது. ஆனால், அவரது தியானம் கலையவில்லை. யானை முனிவரின் அருகே சென்றபோது, ஒரு நெருப்பு வளையம் உண்டாகி, அருகில் செல்ல விடாமல் தடுத்தது. தவத்தை மெச்சிய சிவன், முனிவரின் முன்பு தோன்றி வரம் கேட்க சொன்னார். “பெரியமலையில் இருந்து அருள் புரிய வேண்டும்என முனிவர் வேண்டிக் கொண்டார். இறைவனும் பெரியமலையில் தங்கினார்.

இந்தக் கோயிலில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதால் ஏழேழு ஜென்மத்திற்கும் பலன் உண்டு.

சிலாத்தியர் என்ற முனிவர் தனது கடும் தவத்தால் உடலுடனேயே சொர்க்கம் செல்லும் வரத்தை சிவனிடம் பெற்றார். வழியில் இவரைப் பார்த்த நாரதர், “உமது மூதாதையர்களுக்கு யாரும் சரிவர திதி கொடுக்காததால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்என்றார். சிலாத்தியர் மிஞ்சிஎன்ற தர்ப்பை புல்லை வைத்து, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தார். இந்த இடமே காலப்போக்கில் இஞ்சிமேடானது என்கிறார்கள். அன்று முதல் மூதாதையர்களுக்கு, அமாவாசை தோறும் திதி கொடுக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு தான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பழநியில் முருகனுக்கு போகர் சித்தர் நவபாஷாணத்தால் சிலை அமைத்தது போல, திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேட்டில் உள்ள திருமணிச்சேறை உடையார் கோயிலில் நவபாஷாண லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

கோரிக்கைகள்:

பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டுதான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. பாம்புக்கடிக்கு சிறந்த மருந்தாக இந்த தீர்த்தம் பயன்படுகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்ற பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *