தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.

+ 91- 4652 – 241 421

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாணுமாலையன்
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் பிரபஞ்சதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஞானாரண்யம்
ஊர் சுசீந்திரம்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி ஆலயம்தான்.

மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க,”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாதுஎன்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க, மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டி, தூங்கச் செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வந்து வேண்ட, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகம் மகிழ்ந்து, மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு, முப்பெரும் கடவுளரும் வழிபடப்பட்டு வருகின்றனர்.

மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் தாணுமாலயன்என்னும் நாமம் தாங்கி காட்சியளிக்கும் தலம். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சசீந்திரம்என பெயர் வழங்கலாயிற்று. அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.

இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும், மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும்.

எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார்.

அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோவில் உயரமான ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது. கோயிலின் பரப்பளவு 5,400 சதுர அடி. அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி. இதனை நாஞ்சில் நாட்டின் பல பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும் கண்குளிரக் காணலாம். கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது.

கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை விக்கினேசுவரிஎன அழைக்கிறார்கள். இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடப்பக்கத்தே அன்னை பார்வதியும் உள்ளனர். இவைகள் வேறெங்கும் காணவியலா காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவக்கிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர்.

2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள அநுமனின் சிற்பமும் உள்ளது. நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு இலிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.

குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் அறம் வளர்த்த அம்மன்கருவறை உள்ளது. சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, இராமபிரானின் கருவறைக்கு எதிரில் அநுமன் நெடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இச்சிலை கிட்டியதாம்.

கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள இலிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார். இலிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம். திருவிளக்கு பூசையில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது அவர்களின் நம்பிக்கையின் அடையாளம்.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது தாணுமாலயத் தீர்த்தம்என அழைக்கப்படுகின்றது.

திருவிழா:

சித்திரை மாதம் தெப்பத்திருவிழா – 1 நாள்.

ஆவணி பெருநாள் திருவிழா – 9 நாள்.

மார்கழி திருவாதிரை திருவிழா– 10 நாள்.

மாசி திருக்கல்யாண திருவிழா – 9 நாள்.

பிரார்த்தனை:

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பட்டு உடைகள் படைத்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தருதல், அபிஷேக ஆராதனைகள், இறைவனுக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தலாம். ஸ்ரீராம ஜெயம் எழுதி சாத்தலாம். பொருள் படைத்தோர் அன்னதானமும், திருப்பணிக்கு பொருளுதவியும் செய்யலாம்.

வழிகாட்டி :

திருநெல்வேலியிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *