சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம்.

+91-98439 39761

காலை 6 – 10.30 மணி, மாலை 5 – இரவு 8.30 மணி. இராகு காலத்தை ஒட்டி இக்கோயில் செவ்வாய்க்கிழமை மாலை 3- இரவு 8.30 வரையிலும், வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.30 – மதியம் 12.30 வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் சசிவர்ணேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சிவகங்கை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சசி என்றால் சந்திரன். சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்ததால் சிவனுக்கு சந்திரசேகரர், சோமசேகரர் (சோமன் சந்திரன்), சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர்கள் ஏற்பட்டன. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பி, சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர் சூட்டினார்.

இங்குள்ள பெரியநாயகி அம்பிகை பிரசித்தி பெற்றவள் ஆவாள். பவுர்ணமியன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். சித்திரைப் பிறப்பன்று இவளுக்கு விளக்கு பூஜையும் உண்டு. அன்று, சுவாமி புறப்பாடாவார். இப்பகுதியிலுள்ள பெண்கள் சுகப்பிரசவம் ஆக இவளிடம் வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக மருந்து குடிப்புஎன்னும் சடங்கை இப்பகுதியில் அதிகம் செய்கின்றனர். சுகப்பிரசவமாக அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்து, அதை பிரசாதமாகப் பெற்று பருகுகிறார்கள். ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இங்கு வந்து இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். கோயிலுக்கு வரமுடியாத பெண்கள் சார்பில் அவர்களது குடும்பத்தார் வந்து, இந்த வழிபாட்டைச் செய்வதுண்டு.

பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதாலும், அழாமல் இருந்தாலும் இங்கு அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர். இதற்காக இங்கு வரும் பெற்றோர், அம்பிகைக்கு அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் அதையே பிரசாதமாகத் தருவர். குழந்தையை அம்பாள் சன்னதி முன் நிறுத்தி, அம்பிகையை வணங்கி கோயில் வளாகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பின், குழந்தை மீது அபிஷேக தீர்த்தத்தை ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார்கள். “குழந்தையும் தெய்வமும் ஒன்றுஎன்பர். அம்பிகைக்கு அபிஷேகித்த தீர்த்தத்தால், குழந்தையைக் குளிப்பாட்டுவதால் அதன் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

வழக்கமாக துர்க்கையம்மன், சிவன் சன்னதி சுற்றுச்சுவரில் வடக்கு திசை நோக்கித்தான் இருப்பாள். ஆனால், இக்கோயிலில் தென்திசை நோக்கி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இரண்டு கைகளுடன், இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனைக் கிடத்திய நிலையில் இவள் அமர்ந்திருக்கிறாள். திருமணத்தடை உள்ள பெண்கள் இவளுக்கு செவ்வரளிப்பூ மாலை அணிவித்து, எலுமிச்சையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் போன்ற பிரச்னை தீரவும், வயது அதிகமாகியும் உருதுவாகாத பெண்களுக்காகவும் இவளுக்கு தீபமேற்றி, 27 முறை சன்னதியை வலம் வந்து வணங்குகின்றனர். மாசி மகத்தன்று இவளுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.

அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. பிரகாரத்தில் நாகத்தின் கீழே திருநாகேஸ்வரர் இலிங்கம் இருக்கிறது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை மற்றும் நாகம் தொடர்பான இதர தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30- 6 மணி) பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர். தவிர, இங்கு வில்வ மரத்தடியில் உள்ள நாகர் சன்னதியிலும் வழிபடுகின்றனர்.

பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், காலபைரவர், சந்திரன் உள்ளனர்.

திருவிழா:

ஆடி அமாவாசை, மாசி மகம், நவராத்திரி, சிவராத்திரி.

கோரிக்கைகள்:

பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக, பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதாலும், அழாமல் இருந்தாலும் இங்கு அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர். திருமணத் தடை நீங்க, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் போன்ற பிரச்னை தீரவும், வயது அதிகமாகியும் உருதுவாகாத பெண்களுக்காகவும் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

செவ்வரளிப்பூ மாலை, எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபாடு, 27 முறை கோயிலைச் சுற்றி வருதல் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *