இராமநாதீஸ்வரர் திருக்கோயில், போரூர்

அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில், போரூர், சென்னை.

+91 99410 82344

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இராமநாதீஸ்வரர்
அம்மன் சிவகாமசுந்தரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் போரூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கும் சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், சிவனின் திருவிளையாடலால் சக்திதேவி தோல்வி அடைந்தாள். இதன்பின், ஒன்பது கங்கைத் துளிகளாக ஆழ்கடலில் அமிழ்ந்துவிட்டாள். அதனைச் சுற்றி 21 துளிகளாக சக்திக்கு சிவன் தரிசனம் கொடுத்தார். அதில் ஒரு துளி நீர் தரிசனம் தந்த இடமே, கைலாயகிரிபுரம்(தற்போதைய ராமேஸ்வரம்) என்பதாகும். இச்சம்பவத்திற்கு பிறகு, சக்திதேவி தன் அண்ணன் மஹாவிஷ்ணுவிடம் சென்று வரம் கேட்டாள். “காளிரூபத்தோடு சிவனை அடக்கி ஆளவேண்டும். பின்னர் சிவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்என்பதே அந்த வரம். “அவ்வாறே ஆகட்டும்என்ற விஷ்ணு, “சிவன் காஞ்சிபுரத்தில் இலிங்கவடிவில் இருக்கிறார். அங்கு போய் அவரை அடக்கியாளலாம்என்று சொன்னார். சக்தி அங்கு சென்றதும், மாயவனின் லீலையால் காஞ்சிபுரம் முழுவதுமே இலிங்கமயமாக இருந்தது. உண்மையான சிவன் யார் என்று தெரியாமல் சக்தி திணறினாள். அவளது கோபம் அதிகமானது. தான் கணவரை பிரிந்து வாடுவது போல், தன் அண்ணன் விஷ்ணுவும், இராம அவதாரம் எடுத்து மனைவியாகிய சீதையைப் பிரிந்து துன்புற வேண்டும். பின்னர் சிவனை வழிபட்டு சீதையை அடைய வேண்டுமென்று சாபம் கொடுத்தாள். இந்த சாபத்தின்படி, விஷ்ணு இராமாவதாரத்தின் போது சீதையைப் பிரிந்தார். அவளை தேடிச்சென்ற இராமன், இலுப்பைக்காடு சூழ்ந்த போரூர் என்னுமிடத்தில் ஒரு நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். பூமிக்கடியில் இலிங்கம் இருப்பதை அறிந்து, அதை வெளிக் கொண்டுவர 48 நாட்கள் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு இலிங்க வடிவில் வந்தார். இராமன் லிங்கத்தைக் கட்டி அணைத்து அமிர்தலிங்கமாக மாற்றினார். இந்த சிவனுக்கு இராமநாத ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இராமருக்கு குருவாக சிவன் விளங்கிய காரணத்தால் இந்த கோயில் குரு ஸ்தலமாக விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் குருவுக்கு செய்ய வேண்டிய நிவர்த்தி பூஜை அனைத்தும் சிவனுக்கே நடக்கிறது. மூர்த்திகரமான இராமநாத ஈஸ்வரரை வழிபட்டால் குரு தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் 48 நாட்கள் விரதமிருந்து வழிபட, புத்திரபாக்கியம் கிடைக்கிறது. திருமணத்தடையுள்ளவர்களும் இவ்வாறே இவரை வழிபட்டு வரலாம். இந்த இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வணங்குவது சிறப்பு.

பெருமாள் கோயில்களில் தான் தீர்த்தம் கொடுத்து சடாரி வைப்பது வழக்கம். சிவனைக் குருவாக ஏற்று இராமபிரான் வழிபட்டதால், இந்தக் கோயிலில் தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கிறார்கள். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம், நால்வர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. நவக்கிரகங்கள் அனைத்தும் தமது தேவியருடன் அருள்பாலிப்பது சிறப்பு.

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்

கோரிக்கைகள்:

புத்திரபாக்கியம் இல்லாதோரும், திருமணத் தடையுள்ளவர்களும் இங்குள்ள இராமநாத ஈஸ்வரரை வழிபட்டு பலன் அடைகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்குள்ள இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வணங்குவது சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *