புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 44 – 2902 1016, 99620 34729

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 – 1 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

மூலவர் புஷ்பரதேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சொர்ணாம்பிகை
தல விருட்சம் நாகலிங்கமரம்
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஞாயிறு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

தேவலோக சிற்பியான விசுவகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.


சூரியன் பூஜித்த இலிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை. ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, இரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட மன்னன், பார்வை இழந்தான். வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் இலிங்க வடிவில் இருப்பதாகக் கூறினார். அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை மலரில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், “புஷ்பரதேஸ்வரர்என்று பெயர் பெற்றார். சிவலிங்க பாணத்தில் மன்னனால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கிறது.

கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக்காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

விநாயகர் தலையில் கிரீடத்துடன்தான் இருப்பார். ஆனால் இங்கு கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தந்தைக்கு மரியாதை செய்யும் விதமாக, இவர் இவ்வாறு காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை பல்லவ விநாயகர்என்றழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சிலை இருக்கிறது. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, யோக பட்டையுடன் காட்சி தருகிறார். கால பைரவர், கமல விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர் ஆகியோரும் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியில் சூரிய புஷ்கரிணி உள்ளது.

இங்கு தலபுஷ்பமாக தாமரை இருக்கிறது. சூரியன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர், “ஞாயிறுஎன்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சூரிய கிரகத்தின் பெயரிலேயே தலம் அழைக்கப்படுவது விசேஷம். அம்பாள் சொர்ணாம்பிகை, சிவனுக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு முன்பு தனி பீடத்தில், ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவிழா:

தமிழ் புத்தாண்டில் சூரியபூஜை, நவராத்திரி, தைப்பொங்கல்.

கோரிக்கைகள்:

சூரியன், கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக இருப்பதால், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர் சூரியனுக்கு கோதுமைப்பொங்கல், கோதுமை பாயசம் படைத்து வேண்டிக்கொள்கின்றனர்.

இங்குள்ள பல்லவ விநாயகரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் சிவன், அம்பாள், சூரியனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *