பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூலாநந்தீஸ்வரர் (அளவுக்களவானவர்)
அம்மன் சிவகாமி
தல விருட்சம் பூலா மரம்
தீர்த்தம் சுரபி தீர்த்தம்
புராணப் பெயர் அரிகேசநல்லூர்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு


சிவபெருமான் பல இடங்களில் சுயம்புவாய் தோன்றுவது போல் சுரபி நதி அருகிலும் சுயம்புவாய் முளைத்துள்ளார். வீரபத்திரர் சாபம் பெற்ற கற்பகதரு இலிங்கத்தின் அருகில் முட்பூலாவாக தோன்றி, பூலாவனமாக ஆகி சிவலிங்கத்திற்கு நிழல் தந்தது. அப்பகுதியை ஆண்ட இராச சிங்க பாண்டியன் சுரபி நதிக்கருகில் தங்கியிருந்தபோது, அவனுக்கு பால் கொடுக்க வரும் இடையன் தினமும் அந்த பூலா மரத்தருகே தடுக்கி விழந்ததனால் கோபம் கொண்டு பூலாமரத்தின் வேரைக் கோடாரியால் வெட்ட ரத்தம் பீறிட்டது. இச்செய்திகேட்டு இராச சிங்கன் அந்த இடம் சென்று உண்மை உணர்ந்தான். அந்த வேரின் அடியில் இருந்த இலிங்கத்தை வணங்கினான். உடனே குருதி மாறி விசுவரூபமெடுத்த இறைவன், மன்னனின் வேண்டுகோளுக்காக,”அளவுக்கு அளவாகக்குறுகி நின்றருளினார். ஆனந்தம் பொங்க இலிங்க வடிவான இறைவனை மன்னன் கட்டித் தழுவினான்.

அதிலிருந்து அளவுக்களவானவர் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கிறவர்களின் பார்வை எந்த உயரமோ அதே அளவு உயரமாக லிங்கம் காட்சி தரும் அதிசயத்தை காணலாம்.
திருவிழா :

சித்திரைப் பெருந் திருவிழா 10 நாட்கள் திருவிழா. வைகாசி விசாகம் பால்குட விழா.

ஆனி ஆனிதிருமஞ்சன விழா.

ஆவணி விறகு விற்றல் திருவிழா.

புரட்டாசிநவராத்திரி திருவிழா.

ஐப்பசி கந்த சஷ்டி விழா.

கார்த்திகை திருக்கார்த்திகை.

மார்கழி ஆருத்ரா தரிசனம்.

தை தைப்பூசத் தெப்பத்திருவிழா.

மாசிசிவராத்திரி

பங்குனி பங்குனி உத்திரம்


இத்தல விநாயகர் கற்பகவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இலிங்கம் வெட்டுப் பட்ட நிலையில் உள்ளது. இங்கிருக்கும் அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சகர்கள் எவ்வளவோ தடவை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருப்பது அதிசயம். அதேபோல் இங்குள்ள மரத்தில் நாகலிங்க பூ பூக்கிறது. இப்பூவில் நடுவில் இலிங்கம் போன்றும் அதற்கு ஆதிசேசன் போல் குடையாக இலிங்கத்தின் மீது இருப்பது அதிசயமாக உள்ளது. பார்க்கிறவர்களின் பார்வை எந்த உயரமோ அதே அளவு உயரமாக இலிங்கம் காட்சி தரும் அதிசயத்தை காணலாம். மன்னன் ஆலிங்கனம் செய்த அடையாளமாக இப்போதும் இலிங்கத்தின் மீது மன்னனின் மார்புக் கவசத் தடம் இருக்கிறது. இவ்வூரில் பிறப்பவர்களுக்கு முக்தி தரும் சிறப்புடைய சிவதலம். இவ்வூரில் இறப்பவர்களின் எலும்புகள் சுரபி நதியில் விழுந்தால் கல்லாக மாறும் என்பது ஐதீகம்.


பிரார்த்தனை :

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் பாவங்கள் விலகி பேரின்பம் அடையலம். தவிர குழந்தை வரம், திருமண வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.


நேர்த்திக்கடன் :

சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் அபிசேகங்கள், அம்பாளுக்கு புடவை சாத்துதல், பொங்கல் படைத்து விநியோகித்தல் ஆகியவை முக்கிய நேர்த்தி கடன்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *