பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர்

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோவை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 1மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பட்டீஸ்வரர்
அம்மன் பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்சம் புளியமரம், பனைமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பேரூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான பட்டிவிளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.


பதறிப்போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் காமதேனுபுரம்என்றும், உன் கன்றின் பெயரால் பட்டிபுரிஎன்றும், எனக்கு பட்டீஸ்வரர்என்றும் பெயர் வழங்கப்படும்என அருளினார். சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.


முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.
இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு பிறவாப்புளிஎன்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.
இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் இறவாப்பனைஎனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.
நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம்.


இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் நமசிவாயஎனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் மேலைச்சிதம்பரம்என அழைக்கப்படுகிறது.

கயிலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் அவரிடத்தில் “சுவாமி தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகராகக் கருதக் கூடியது எது? என ஒரு சந்தேகம் கேட்டாராம். அதற்கு பெருமான் பதில் கூறிய போது “உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம் என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவைதாம். ஆனால், எளிய மனிதருக்கும் சென்று முக்தி அடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு என்றாராம்.” இந்த மகிமையைக் கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்த முருகப் பெருமான் அதை நாரதருக்கு உணர்த்த, நாரதர் உடனே கொங்கு நாடு சென்று வெள்ளியங்கிரி என்ற மலையில் உமாதேவியுடன் உறையும் சிவபெருமானைத் தரிசித்தாராம். (நாரதர் அன்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகின்ற திருக்கோயில் பட்டீசுவரர் ஆலயத்துக்குச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கின்றது.) இந்த தரிசனத்தை முடித்துக் கொண்ட முனிவர், காஞ்சிமா நதிக்கரையோரத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, அதன் அபிடேகத்துக்கென ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி ஆராதனை செய்தாராம். நாரதேசுவரம் என்று இந்த ஆலயத்துக்குப் பெயர் உண்டாயிற்று. நாரதர் வந்தடைந்த வெள்ளியங்கிரி முதலான ஐந்து மலைகள் அரண் போல் சூழ காஞ்சி நதி அவற்றை ஒட்டிப்பாய எழிலான இயற்கைச் சூழலின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறார் பட்டீசுவரப் பெருமான்.

இக்கோவில் கட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. சோழர்காலத்து கட்டடக்கலைக்கு பேரூரே முதல் உதாரணமாககும். கரிகாற்சோழன், விக்கிரமசோழன், வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான் முதலிய கொங்குச்சோழர்களின் கல்வெட்டுகள் இன்னமும் காட்சியளிக்கின்றன. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தெற்குப் ராஜகோபுரத்தில் தெற்குப் பார்த்த தட்சிணா மூர்த்தியின் நான்கு தோற்றங்கள் சிற்ப்பு வாய்ந்தவை. கிழக்கு பார்த்த வாசல். இராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலையம்சமுள்ள சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கனக சபையை திருமலை நாயக்க மன்னன் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் கட்டினான். 1625 முதல் 1659 வரை 34 வருடங்கள் கட்டப்பட்ட கனகசபையில் பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார், இறைவன். அதனால்தான் இத்தலம் மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.  இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயரில் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம்.
கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான 8 சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள். அதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருயே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை, அதைத் தாண்டினால் குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படுகின்றது. அதைத் தாண்டினால் சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜர் அவரோடு சிவகாமியம்மை காட்சியளிக்கின்றனர். நடராஜரின் மண்டபத்தை 4 வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம். இறைவனுக்கு பணிந்த நிலையில் தூண்கள் சற்றே சாய்ந்த நிலையில் அமைந்துள்ளன. ஆனந்தத் தாண்டவமாடும் இறைவன் இடதுகையில் அக்னி, வலதுகையில் உடுக்கை, அபயஹஸ்தம் ஆடி அடங்கப்போகும் நிலையில் தூக்கிய திருவடிகூட சற்றே தாழ்ந்த நிலையிலுள்ளது. சடையும் தாழ் சடையாக காணப்படுகின்றது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாக அமைக்கப்பட்டுள்ளன. முயலகன் மீது ஊன்றிய திருவடிவில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை உள்ளது.


சிவகாமி அம்மையார் வலதுகையில் நீலோத்பவ மலரோடு இடதுகை டோலஹஸ்தம் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றாள். திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் ஒன்றாகவும், நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாகவும், சிறப்புத்தாண்டவ தலங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது. இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.


சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையில் மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை 28 வருடங்களாக பாடுபட்டு செய்தவரின் பெயர் கம்பனாச்சாரி. குனகசபையில் 36 தத்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 36 தூண்கள் உள்ளன. சிற்பங்கள் அனைத்தும் செய்து முடித்தபின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மன்னர், கம்பனாச்சாரியாரோடு ஏராளமான பொதுமக்களும் கோவிலுக்குள் வந்து கம்பனாச்சாரியாரின் சிலைகளை பார்வையிட்டனர். மகிழ்ச்சியான அந்த தருணத்தில், கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் இரண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைகளில் ஒருபக்கம் உள்ள சிலையில் குறை உள்ளது என்று கூறினான். அதைக் கேட்ட கம்பனாச்சாரியார் குறையை நிரூபிக்குமாறு கேட்டார். உடனே அந்த இளைஞன் நடராஜரின் இடதுபுறத்தில் இருந்த குதிரைவீரன் சிலை முழுவதும் சந்தனத்தை பூசுமாறு கூறினான். அதன்படியே பூசப்பட்டது. சிலையின் ஒரு இடத்தில் மட்டும் சந்தனம் ஈரமாகவே இருந்தது. அந்த இடத்தை உடைக்குமாறு இளைஞன் கூறினான். உடைக்கப்பட்ட இடத்திலிருந்து உள்ளே வசித்து வந்த தேரை குதித்து ஓடியது. சிற்ப சாஸ்திரம் படித்த தனக்குத் தெரியாத இந்தக் குறை ஒரு இளைஞனால் கண்டறியப்பட்டது கண்ட கம்பனாச்சாரியார் தனது கைகளை வெட்டிக் கொண்டார். இக்கதையை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் நடராஜர் சந்நிதிக்கு இடதுபுறம் சந்தனம் அரைக்கும் இடத்திற்கருகே உடைந்த குதிரைவீரன் சிலையின் மிச்சத்தினை காணலாம். கம்பனாச்சாரியாரின் சிற்பத் திறமைக்கு எடுத்துக் காட்டாக தூண்கள் முழுவதும் நிறைந்துள்ள ஏராளமான சிற்பங்களைக் காணலாம். தற்போது 8 அழகிய சிற்பங்களுக்கும் பாதுகாப்பிற்காக கம்பிக்கூடு (வேலி) போடப்பட்டுள்ளது. கஜசம்ஹாரமூர்த்தி, முருகனின் எழில் தோற்றம், ஒவ்வொரு புறமும் ஒவ்வொரு பாவம்
காட்டும் காளி எனக் காண கண்கோடி வேண்டும். புராதனமான கோவிலின் கருவறையை கரிகாற்சோழன் அமைத்துள்ளார். 12 முதல் 13ம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்த கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபத்தையும், மகாமண்டபத்தையும் கட்டினர். பேரூர் கோவிலில் மொத்தம் 6 கோபுரங்கள் உள்ளன. சிற்பவளத்திலும், இலக்கிய வளத்திலும் பெருமை பொருந்தியது பேரூர். பேரூர் புராணத்தை கச்சியப்ப முனிவர் செய்யுளாகவே எழுதியிருந்தார். இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உரைநடையாக எழுதி பேரூருக்கு மேலும் பெருமையை சேர்த்தவர் கோவைகிழார்.

வரலாற்று காலக் கணக்குப்படி பேரூர் ரோமானியர் காலத்திலேயே அந்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அக்காலத்திய நாணயங்களின் வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவிலின் முகப்பில் உள்ள தெப்பக்குளம் பதினாறு வளைவுகளை கொண்ட நான்கடுக்குகளைக் கொண்டுள்ளது. சிறியதும், பெரியதுமான தேர்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிமாநதி என்றழைக்கப்படும் நொய்யல் நதி அதன் இரு பக்கங்களிலும் காட்சியளிக்கும் தென்னந்தோப்புகள், சோழன் துறை என்றழைக்கப்படும் நொய்யல் படித்துறை ஆகியவை இன்றளவும் உள்ளன. பேரூரை வடக்குப்பகுதியிலும், தெற்கு பகுதியிலும் அரனாக நின்று பாதுகாப்பது வடகைலாய நாதர் கோவில், பட்டீசுவரர் கோவிலை தென்கைலாய நாதர் கோவில் என்றழைக்கின்றனர். பழங்கற்சின்னமும், முதுமக்கள் தாழியும், உரோமானியக் காசும் இப்பகுதியில் மிகுதியாய்க் கிடைப்பது தொன்மைக்குச் சான்றாகும்.

கருவறையில் இறைவன் லிங்க வடிவில் பட்டீஸ்வரன் (பட்டிப்பெருமான்) என்னும் நாமத்துடன் தரிசனம் தருகின்றார். கிழக்குதிசை நோக்கியுள்ள மூலவரின் பின்புறத்தில் காமதேனுவும் இடம் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் முருகப்பெருமான், விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மையருக்கும் நடுவில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் பாலதண்டபாணியாகக் காட்சியளிக்கின்றார்.

திருவிழா:
திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.


பிரார்த்தனை:
முக்தி வேண்டியும், புகழ் கிடைக்கவும், நினைத்த காரியம் நடைபெறவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கு அபிஷேம் செய்தும், வில்வ இலையால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.
வழிகாட்டி:

கோயம்புத்தூரிலிருந்து(6 கி.மீ.) சிறுவாணி செல்லும் வழியில் பேரூர் உள்ளது. டவுன் பஸ் வசதி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *