பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம்
அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம், மடவிளாகம், ஈரோடு மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பச்சோட்டு ஆவுடையார் | |
அம்மன் | – | பச்சை நாயகி (பரியநாயகி) | |
தீர்த்தம் | – | நிகபுஷ்கரணி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பார்வதிபுரம் | |
ஊர் | – | காங்கேயம் – மடவிளாகம் | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக (பிட்சாடனர்) அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து, தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறாகும்.
பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் “பச்சோட்டு ஆவுடையார்” என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் “பச்சோட்டு ஆளுடையார்” எனக் காணப்படுகிறது. தலத்தின் நாயகி “பச்சை நாயகி, பெரியநாயகி.”
கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. “நிகபுஷ்கரணி” என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் “குடம்” அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது “சிறிய செம்பு” அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பார்வதி இங்கு தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. கொடிமரம் வணங்கி, வாத்திய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் “ஆருத்ரா கபாலீஸ்வரர்” என்ற மற்றொரு சுயம்பு மூர்த்தியைக் காணலாம். இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவத்தலம் இதுவாகும். ஸ்ரீதேவி பூதேவி உடனுறை இரகுபதி நாராயணப்பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் கன்னிமூலகணபதி, முருகன், சபாநாயகர் மண்டபம், தான்தோன்றீஸ்வரர் என்ற சுயம்புலிங்கத்திற்கு சன்னதிகள் உள்ளன.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply